Friday, October 6, 2017

தவறான சிகிச்சை அளித்த அரசு பெண் மருத்துவருக்கு அபராதம்; இணை இயக்குநரகத்தையும் வெளுத்து வாங்கியது நீதிமன்றம்.



அரியலூர்

அரியலூரில் தனியார் மருத்துவமனை நடத்தி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த அரசு பெண் மருத்துவருக்கு ரூ.10 இலட்சம் அபராதமும், அரசு மருத்துவர் தனியார் மருத்துவமனை நடத்தியதை கண்காணிக்காத ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குநரகத்திற்கு ரூ.1 இலட்சமும் அபராதம் விதித்து அரியலூர் நுகர்வோர் குறைதீர்வு மன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருமாள்தாய் (35). கடந்த 2009-ஆம் ஆண்டு இவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வீட்டின் அருகே தனியார் மருத்துவனை நடத்தி வரும் அரசு மருத்துவர் ஆர்.கே.காஞ்சனாவைச் சந்தித்து சிகிச்சைப் பெற்றார். இருப்பினும் தொடர் இரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலி இருந்ததால் காஞ்சனா வயிற்றில் கரு சரியாக தரிக்கவில்லை உடனடியாக கருவை கலைக்க வேண்டும் என்று கூறி அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.

ஆனால், அதன்பிறகும் வயிற்றுவலி குறையாததால் பெருமாள்தாயின் தந்தை, அவரை ஆபத்தான நிலையில் திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பெருமாள்தாய்க்கு தவறான அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டு உள்ளது என்றும், ஆபத்தான நிலையில் இருப்பதால் வயிற்றில் உள்ள ஒரு குழாயை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்து அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து பெருமாள்தாயின் கணவர் செந்தில்வேல், மருத்துவர் காஞ்சனாவை சந்தித்து, தனது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அறிக்கைகளைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்திற்கு ஆய்விற்காக அனுப்பட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்று கூறி பல நாள்களாக இழுத்தடிப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து செந்தில்வேல், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் கடந்த 16.11.2011 அன்று மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு மன்றத் தலைவர் ஜெயசந்திரன், தவறான சிகிச்சையளித்த மருத்துவர் காஞ்சனா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 இலட்சமும், வழக்குத் தொடர்ந்த நாளில் இருந்து தொகைச் செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து நட்ட ஈடு வழங்குமாறு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில், ஒரு அரசு மருத்துவர், தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை கண்காணிக்காத பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குநரகம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் செந்தில்வேலுக்கு ரூ.1 இலட்சமும், வழக்குத் தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்து நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் ஜெயந்திரன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024