Saturday, October 28, 2017

என்ஜினீயரிங் பட்டதாரிகள் எத்தனை பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்? மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு



எத்தனை பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 28, 2017, 03:30 AM

சென்னை

இந்தியா முழுவதும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் எத்தனை பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘அண்ணா பல்கலைக்கழக இணைவிப்பு பெற்ற என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டமைப்பு மையம் மாநில அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.

இதன்கீழ் 30 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் வளாக நேர்முகத்தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

வேலையில்லாமல் திண்டாட்டம்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு நடந்துள்ளது. அதில், எத்தனை பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். கல்லூரிகளின் பெயர்களை பிரபலப்படுத்த இதுபோன்ற நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படுகிறதா?’ என்பது குறித்து கேள்விகள் எழுப்பி தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அதிக எண்ணிக்கையில் என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்குவதால், என்ஜினீயரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது என்று கூறினார்.

மத்திய அரசுக்கு கேள்வி

பின்னர், இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளரையும் எதிர் மனுதாராக சேர்த்த நீதிபதி, நாடு முழுவதும் என்ஜினீயரிங் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டார்.

மேலும், இந்தியாவில் எத்தனை என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன?, அவற்றில் ஆண்டுக்கு எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்?, வெற்றிகரமாக படிப்பை முடித்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர்?, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர்?, எத்தனை என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்? என்பது உள்பட 12 கேள்விகளை எழுப்பி இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். பின்னர், விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024