ஜெ., மரண விசாரணை : அரசு மருத்துவர்கள் ஆஜர்
Added : டிச 05, 2017 22:15
சென்னை: ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் நீதிபதி, நேற்று, இரு அரசு மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்று, தீபாவின் கணவர், மாதவன் மற்றும் அரசு மருத்துவரிடம், விசாரணை நடைபெற உள்ளது.
'சம்மன்' : ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, அரசு மருத்துவர்களிடம், நீதிபதி, ஆறுமுகசாமி விசாரணை நடத்துகிறார். இதுவரை, தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம் விசாரணை நடந்தது. சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மயக்கவியல் துறை பேராசிரியர், கலா; மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன் ஆகியோர், நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். காலை, 10:30 மணியில் இருந்து, பிற்பகல், 2:15 மணி வரை அவர்களிடம், நீதிபதி, ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். அவர்கள் இருவரும், முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அவர்களிடம், ஜெ., உடல் நலம் குறித்த விபரங்களை, நீதிபதி விசாரித்ததாக கூறப்படுகிறது. இன்று, அரசு மருத்துவர், டிட்டோ, ஜெ., அண்ணன் மகள், தீபாவின் கணவர், மாதவன் ஆகியோர் ஆஜராக, கமிஷன் சார்பில், 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.
மனு : அதே போல், அரசு மருத்துவர்கள், பாலாஜி, தர்மராஜன் ஆகியோர், நாளை விசாரணை கமிஷனில் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., - ஜெ., என்ற அமைப்பை துவக்கியுள்ள, பசும்பொன் பாண்டியன் என்பவர், 'முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்' என, மனு கொடுத்து உள்ளார்.
No comments:
Post a Comment