Wednesday, December 6, 2017


"இந்த விவகாரத்தை சும்மா விட மாட்டோம்..!" முஷ்டி முறுக்கும் விஷால்
தரப்பு




செ ன்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துடன், வேட்புமனுவையும் தாக்கல் செய்தது, தமிழக அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தல் குறித்து அவருடன் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், நடிகர் விஷால் சுயேச்சையாக ஆர்.கே.நகரில் நிற்க, டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் அலுவலரிடம் தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான சேரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில், இத்தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடந்தது. விஷால் மனுவில் பல்வேறு குறைகள் இருப்பதால் அதனை ஏற்கக்கூடாது என அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எனவே, விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்ற தகவல் வெளியானதால் ஆர்.கே.நகரில் பெரும் பரபரப்பு நிலவியது. 'தன் மனுவை நிராகரிக்கக் கூடாது' என விஷால்தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

பிற்பகலுக்குப் பிறகு விஷால் மனுவில் அவரை முன்மொழிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட இருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தேர்தல் அலுவலகம் முன் விஷால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு தொடர்ந்து நீடித்தது. அதன் பின்னர் தன்னை முன் மொழிந்தவர்களை, அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்கள் மிரட்டியதற்கான தொலைபேசிய ஆடியோ ஆதாரங்களை தேர்தல் அலுவலரிடம் விஷால் சமர்ப்பித்தார். மீண்டும் தேர்தல் அலுவலரைச் சந்தித்துமுறையிட்டார் "தேர்தலில் நின்று வெற்றி பெற்று இத்தொகுதி மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என எண்ணுகிறேன்" என்று கேட்டுக்கொண்டார். பின்னர் விஷால் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 11 மணியளவில், போதிய எண்ணிக்கையிலானோர் விஷால் மனுவை முன்மொழியவில்லை என்று கூறி அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த விவகாரம் அரசியல்களத்தில் பெரும் தீயாகப் பற்றிக் கொண்டுள்ளது.



அரசியல் அழுத்தம் காரணமாகவே விஷால் மனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முன் மொழிந்தவர்கள், மிரட்டப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதால் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் விஷால் அணுக வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி விஷால் வேட்பு மனு விவகாரம் முடியும்வரை இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக விஷாலின் செய்தித் தொடர்பாளர் முருகராஜைத் தொடர்பு கொண்டு பேசினோம். "சுயேச்சை வேட்பாளர்களில் நேர்மையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு ஆதரவாக விஷால் பிரசாரம் செய்யவுள்ளார். அதேநேரத்தில் இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை. மனு நிராகரிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்துள்ளனர். இதனை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம். தேர்தல் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவர் வெளியில் சென்று பேசிவிட்டு வந்து, விஷாலின் மனுவை நிராகரித்தார். அதனால் அவருடைய மொபைல் போனுக்கு வந்துள்ள அனைத்து அழைப்புகளின் பட்டியலைத் தயரித்து வருகிறோம். தேர்தல் ஆணையத்தை அணுகி, அனைத்து ஆவணங்களையும் வழங்க இருக்கிறோம். மேலும் முன் மொழிந்தவர்கள் இருவர் மிகவும் பயத்துடன் உள்ளனர். அந்த நபர்களிடமும் பேசி வருகிறோம். சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும்" என்றார்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்களை பலமுறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை அவர்கள் யாரும் ஏற்கவில்லை. விஷால் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.. "உங்களுடைய கேள்விகளை 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பி வையுங்கள். நான் பதில் தருகிறேன்" என்றார். ஆனால், அவருக்கு கேள்விகளை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் பலமுறை தொடர்பு கொண்டோம். ராஜேஷ் லக்கானியும் நம்முடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக, பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்தமுறை நீதிமன்ற தலையீட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படாமல், முறையாக, நேர்மையாக வாக்குப்பதிவு நடந்தால் சரி...

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024