Tuesday, February 6, 2018

மாணவர் சேர்க்கையை நிறுத்த 13 பொறியியல் கல்லூரிகள் முடிவு: சேர்க்கையை பாதியாகக் குறைக்க 163 கல்லூரிகள் தீர்மானம்

By DIN | Published on : 06th February 2018 01:23 AM |

மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், வரும் ஆண்டில் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்த 13 பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. மேலும், சேர்க்கை இல்லாத படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கவும் 163 பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐடி), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்புப் பொறியியல் (இசிஇ) போன்ற பிரிவுகளின் மீது மாணவர் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

படிப்படியாகக் குறைந்த பி.இ. சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2013-இல் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 838 ஆக இருந்தது. இது 2014-இல் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 79 ஆகக் குறைந்தது.
பின்னர் 2015-இல் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 969 மாணவர்கள் என்ற அளவில் இருந்த சேர்க்கை, 2016-இல் வெகுவாகக் குறைந்தது. இந்த ஆண்டில் 94 ஆயிரத்து 352 மாணவ, மாணவிகள் மட்டுமே பி.இ., பி.டெக். படிப்புகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சேர்ந்தனர்
.
இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 83 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். மொத்தமிருந்த ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்களில் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன.

13 கல்லூரிகள் சேர்க்கையை நிறுத்த முடிவு: மாணவர் சேர்க்கை இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.

கடந்த 2017-இல் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அண்ணா பல்கலைக்கழகத்திடம் 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன. சேர்க்கை குறைவான படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைக்கவும் நூற்றுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன.

அதேபோன்று, இந்த முறை பொறியியல் கல்லூரிகளிடமிருந்து அனுமதி நீட்டிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை (பிப்.1) வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டன.

2018-19 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த 13 பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்திருக்கின்றன. இவற்றில் 9 கல்லூரிகள் மட்டுமே கல்லூரியை மூடுவதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்திடம் முறையாக சமர்ப்பித்திருக்கின்றன. நான்கு கல்லூரிகள் விண்ணப்பத்தையே சமர்ப்பிக்கவில்லை.

சேர்க்கை இல்லாத படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைக்கவும் 163 பொறியியல் கல்லூரிகள் இம்முறை விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...