Tuesday, February 6, 2018

எப்படி இருக்கப் போகிறது ஏப்ரல், மே மாதங்கள்? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்

By DIN | Published on : 05th February 2018 04:18 PM



மழைக்காலம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன நிலையில், குளிர்காலம் விடைகொடுக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது, இதனால் பகலில் வெயில் படிப்படியாக அதிகரிக்கிறது.

மாலை 6 மணியளவில் கடுங்குளிர் வாட்டினாலும், காலை வழக்கம் போல படுஜரூராக பணிக்கு வந்து 10 மணிக்கே சூரியன் நம்மை வறுத்தெடுக்க தொடங்கி விடுகிறார்.

பிப்ரவரி மாதத்திலேயே இப்படி இருப்பதால், வரும் ஏப்ரல், மே மாதங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலை சென்னை வாசிகளை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது.

இதற்கு பதிலாகக் கிடைத்திருப்பது அவ்வளவு ஒன்றும் ஆறுதல் தருவதாக இல்லை.

அதாவது, சென்னையில் ஒட்டுமொத்தமாகவே பசுமையான மரங்கள் நிறைந்த பகுதிகள் என்று எடுத்துக் கொண்டால் வெறும் 15 சதவீத அளவுதான் இருக்கிறது என்கிறது புள்ளி விவரம். இதனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் வரும் கோடை காலத்தில் கடும் வெப்பம் தாக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கேர் எர்த் டிரஸ்ட் என்ற அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வில், சென்னையில் வெறும் 15%ப் பகுதிகளை மட்டுமே மரங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது சென்னை மாநகராட்சியின் ஒட்டுமொத்த பரப்பளவான 426 சதுர கிலோ மீட்டரில், வெறும் 64.06 சதுர கிலோ மீட்டர் பகுதிகளே மரங்கள் நிறைந்துள்ளன.

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களை வர்தா புயல் பாதித்த பிறகு எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது சென்னையில் இருந்த 4.5 லட்சம் மரங்களில் சுமார் 1 லட்சம் மரங்களை வர்தா புயல் வேறோடு சாய்த்து விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதில், சாலையோரங்கள், பூங்காக்கள், சாலைத் தடுப்புகள், குடியிருப்புகள், சில மையங்கள் போன்றவற்றில் இருந்த 9000 மரங்களும் அடங்கும்.

இது தொடர்பான ஆய்வு 6 மாதங்களாக நடத்தப்பட்டு 600 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சென்னை பெருமாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்கு மிக அதிகம். அதுவும் சென்னை போன்ற அதிக வெப்பம் நிறைந்த நகரங்களில் வெப்பத்தைக் கட்டுப்படுத்த மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கடந்த 2000ஆவது ஆண்டில் 79 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இருந்த பசுமை பரப்பு 2005ல் 69 சதுர கிலோ மீட்டராகக் குறைந்து தற்போது 64 சதுர கிலோ மீட்டராக சுருங்கியுள்ளது.

இதற்கு வர்தா புயல் மட்டுமே காரணமா என்றால், நிச்சயம் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களே பசுமைப் பரப்புகளுக்கு முக்கிய எதிரி. மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கவும், நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும், இதர திட்டங்களுக்காகவும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. ஆனால் அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம், பசுமை பரப்பை அதிகரிக்க எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறோம் என்பதே விஷயம் என்கிறார்கள்.

வெப்பத்தை உள்வாங்குவதில் மரங்களின் பங்கு அதிகம். அதே சமயம், காங்கிரீட் தரைகளும் அதிகரித்துள்ளன. காங்கிரீட் தரைகள் அதிகரித்திருப்பதால், வெப்பத்தை பூமி உள்வாங்க விடாமல் காங்கிரீட் தரைகளே வெப்பத்தை பிரதிபலித்து விடுவதால் வெப்பம் அதிகமாக தெரியும். இதனால் கடந்த ஆண்டை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

எனவே, அடுத்த 5 ஆண்டுக்குள் பசுமைப் பரப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...