Friday, February 9, 2018

மே 6-இல் நீட் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி

By DIN | Published on : 09th February 2018 01:45 AM |

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான "நீட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுக்கான அறிவிக்கையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும். விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் "நீட்' தகுதித் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் நாடு முழுதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த ஆண்டு தடையின்றித் தேர்வு நடந்தது.
இதனால், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்காக, தமிழக அரசு இலவசப் பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சியளித்து வருகிறது. முதல் கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு எப்போது?: இந்தச்சூழலில் 2018-ஆம் ஆண்டுக்கான தேர்வு மே 6-இல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்தத் தேர்வில் பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கொள்குறி தேர்வு முறை (நான்கு விடைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது) அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

தகுதி: தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களாக இருந்தால் இந்த மூன்று பாடங்களிலும் 40 சதவீத மதிப்பெண்களுடனும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு: தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 25.

ஆதார் கட்டாயம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகும். விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டவர்களாக இருந்தால் கடவுச் சீட்டு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?: தேர்வுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750. இதர பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ. 1,400.

ஆன்-லைன் விண்ணப்பம்: நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., இணையதளத்தின் (www.cbseneet.nic.in) வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Madras HC Justice Seshasayee retires

Madras HC Justice Seshasayee retires TNN | Jan 8, 2025, 03.58 AM IST  Chennai: A judge might possess the power of a giant, but should not ac...