Sunday, February 11, 2018

குப்பையில் பயோ கழிவுகள்: பேராசை ஊழியர்களால் அபாயம்

Added : பிப் 11, 2018 01:38


சேலம்:சேலத்தில் மருத்துவமனை பயோ கழிவுகள், குப்பைகளில் வீசப்படுகிறது. காசுக்கு ஆசைப்படும் துப்புரவு ஊழியர்களால், நோய் பரவும் அபாயம் அதிகரித்து உள்ளது.

சேலத்தில், 50க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனைகளும், ஏராளமான, 'கிளினிக்'களும் செயல்பட்டு வருகின்றன.

தடை

இவற்றில், அறுவை சிகிச்சையில் அகற்றப்படும் உறுப்புகள், அழுகிய பாகங்கள், கட்டிகள், ரத்தம் தோய்ந்த துணிகள், ஊசி, மருந்து பாட்டில்கள் தினந்தோறும் டன் கணக்கில் சேகரமாகின்றன.இவற்றில் நோய்க்கிருமிகள் அதிகம் இருப்பதால், சுகாதாரம் கருதி, இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மருத்துவமனை நிர்வாகமோ அல்லது அதற்கென உள்ள கழிவு மேலாண்மை நிறுவனங்கள் மூலமாகவோ அகற்றப்பட வேண்டும். பயோ கழிவுகள் அனைத்தும், பிரத்யேக சூளை மூலம், எரிக்கப்பட்டு, உரமாக மாற்றப்பட வேண்டும்.

சேலத்தை பொறுத்தவரை, ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே, பயோ கழிவுகளை சேகரிக்கிறது. இதற்கென எடைக்கணக்கில், கட்டணம் வசூலிக்கிறது. இந்த செலவை குறைக்கும் வகையில், பல மருத்துவமனைகள், மாநகராட்சி துப்பரவு ஊழியர்களிடமே, இந்த கழிவுகளையும் ஒப்படைத்துவிடுகின்றனர்.

தடுத்து நிறுத்த வேண்டும்

பணத்துக்கு பேராசைப்படும் தொழிலாளர்களும், இந்த கழிவுகளை, குப்பையோடு கலந்து விடுகின்றனர். குறிப்பாக, தனியார் துப்புரவு நிறுவனத்தின் வசம் உள்ள வார்டுகளில், அதிக அளவு பயோ கழிவுகள் சேகரிக்கப்பட்டு, குப்பைகளில் கொட்டப்படுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதால், உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியதாவது:பயோ கழிவுகளை சேகரித்து, அழிப்பதற்கான பணியை, சேலத்தில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே செய்து வருகிறது. இதனால், அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை தர வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் அவர்கள் முறையாக சேகரிக்கவும் வருவதில்லை. இதனால், மருத்துவமனைகளில்,
பயோ கழிவுகள் தேங்கி விடுகின்றன.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நோய் பரவும் சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக, இந்த கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் மூலம் அகற்றி விடுகிறோம். மாநகராட்சி நிர்வாகமே, இதற்கென தனியாக, 'பிளான்ட்' அமைத்து, பயோ கழிவுகளை பெற்றுச் சென்றால் இந்த பிரச்னை எழாது.இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதிக்க முடியாது

இதுகுறித்து சேலம் மாநகர நல அலுவலர்
கூறியதாவது:மருத்துவமனைகளில் உணவு கழிவுகள் மற்றும் பொதுமக்களின் குப்பைகள் மட்டுமே சேகரிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பயோ கழிவுகள் அனைத்தையும், தரம் பிரித்து, அழிக்கும் பொறுப்பு, மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்தது.இவற்றை குப்பைகளோடு கலக்க அனுமதிக்க முடியாது. பயோ கழிவு
களை துப்புரவு பணியாளர்கள் சேகரிப்பது தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...