Friday, February 9, 2018

பொன்னும் ஆடையும் அல்லாத பொன்னாடை!

By சிவா. சித்தார்த்தன் | Published on : 08th February 2018 03:23 AM

DINAMANI

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கட்சிக் கூட்டம், அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினரை சிறப்பிக்கும் வகையில், சாதாரண நூலால் தயாரிக்கப்பட்ட சால்வை அல்லது ரோஜா மாலையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அணிவிப்பதுதான் நடைமுறையில் இருந்து வந்தது. பின்னர் காலமாற்றத்தால் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட பருத்தியாலான சால்வைகளை சிறப்பு விருந்தினருக்கும், மற்றவர்களுக்கு நூல் அல்லது கதர் துண்டையும் அணிவிப்பார்கள். 1980-களில் பெரும்பாலான எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களின் தோள்களில் நிரந்தரமாக சால்வைகள் இடம் பிடித்திருந்தது.

நூல், பருத்தி, கம்பளி, ஜரிகை என பலவகையில் சால்வைகள் இருந்தாலும், தேவையான விலையில் வேலைப்பாடு, வண்ணம், நேர்த்தி, பளபளப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றது ஜரிகை சால்வைதான் என்பதால் அதற்கு மவுசு அதிகம். அதனால்தானோ என்னவோ, உச்சபட்ச பதவியிலிருந்து சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் வரை, மிகமிக முக்கிய பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தங்கள் தகுதி, வசதிக்கேற்ற விலையில் வாங்கி அணிவித்து தங்களின் மகிழ்ச்சியையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றனர்.

அண்மையில், ஒரு கல்வி நிறுவனத்தில் நிகழ்ச்சி முடிந்த பின், அதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர், தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை மடித்தபோது, விரலில் ரத்தம் வந்துவிட்டது. அவருக்குப் போர்த்திய சால்வையைப் பரிசோதித்தபோது, அதன் நான்கு முனைகளிலும் குண்டூசி குத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது, அருகிலிருந்த அந்தக் கல்வி நிலையத்தின் ஊழியரிடம், சால்வையில் ஊசி எப்படி வந்தது என்று கேட்ட போது, சில நாள்களுக்கு முன் நடைபெற்ற விழாவில், மேடையில் வைத்திருந்த டீப்பாயின் மேல் அலங்காரமாக இந்த சால்வையைத்தான் விரித்துப் போட்டிருந்ததாக யதார்த்தமாக தெரிவித்தார்.

இப்போதெல்லாம் சில அரசியல் கூட்டங்கள், அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், "சால்வை அணிவிக்காதீர்கள், அதற்கு பதிலாக புத்தகங்கள், கட்சிக்கு நிதி, தாங்கள் நடத்தும் இதழ்களுக்கு நன்கொடை அல்லது தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குங்கள்' என்று வெளிப்படையாகவே வேண்டுகோள் வைக்கின்றனர். இதனை ஏற்று ஒரு சிலர்தான் நிதி, நன்கொடை, சந்தா வழங்குகின்றனர். ஆனால், சால்வை அணிவிப்பவர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை.

தற்போது எந்தவிழா என்றாலும் சால்வை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விழாவில் அணிவிக்கப்படும் சால்வைகளை சிறப்பு விருந்தினரின் உதவியாளர் கனகச்சிதமாக சேகரித்து, மடித்து மூட்டையாகக் கட்டி, அவர்கள் வந்த வாகன த்தில் ஏற்றி வைத்துவிடுவார். வீட்டுக்கு சென்ற பின், இவைகளைத் தரம், ரகம் வாரியாகப் பிரித்து, தங்களுக்கு வேண்டிய ஜவுளிக்கடைக்கு விற்பனை செய்யப்பட்டு, மறு விற்பனைக்குச் சென்று விடும் என்ற ரகசியம் பொதுஜனங்களுக்குத் தெரியுமா?

இதனைப் பார்க்கும்போது, சிறு வயதில் மாட்டுப் பொங்கல் அன்று இரவு நடைபெறும் வழக்கம் நினைவு வருகிறது. தாங்கள் பால் கறக்கும் வீடுகளுக்கு, தங்களின் வசதிக்கேற்ப தாரை தப்பட்டை, குறத்தி நடனம், நையாண்டி மேளம் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வருவார்கள். அவர்கள் மாடுகளுக்கு பூஜை செய்து சாமி கும்பிட்டபின், வீட்டின் உரிமையாளர் வழங்கும் வேஷ்டி, துண்டு, ரொக்கம் பெற்றுக்கொள்வார்கள். பின், தங்களுக்கு கிடைத்த வேஷ்டி, துண்டினை கழுத்தில் மாலைபோல் அணிந்துகொண்டு அடுத்தடுத்த வீடுகளுக்குச் செல்வார்கள். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வேஷ்டி, துண்டுகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும்.

மற்றொரு நிகழ்ச்சியும் இங்கு கூறலாம். இறந்தவருக்கு கருமாதி அல்லது படத்திறப்பு செய்யும்போது, அவரின் ஆண் வாரிசுகளை வரிசையாக உட்கார வைத்து, சொந்த பந்தங்கள் மரியாதை செய்வதாகக் கூறி, வேஷ்டி, சட்டை அளிப்பார்கள். பின்னர், இதனை ஒன்றாக கட்டி சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்துச்செல்வார்கள். இதில் யாருடைய துணி மூட்டை உயரமாக இருக்கிறது என போட்டி போட்டு பேசிக்கொண்டு வருவோம் சிறுவயதில். மாட்டுப் பொங்கலுக்கு வழங்கிய துணியானாலும், வாரிசுகளுக்கு வந்த செய்முறை துணியானாலும் மறு விற்பனைக்கு ஜவுளிக் கடைக்கு சென்றடைவதில்லை.
பொன்னாடை அணிவித்து கெüரவிப்பது என்பது மிகப் பழைய பாரம்பரியம்தான். ஆனால் இன்று அதன் பொருளறியாது, வெறும் சடங்காக மாறிப் போய்விட்டது. இதில் விலை குறைவான, மிக மலிவான போலிகள் வேறு! தோளில் போட்டுக்கொள்ளவும், முகம் துடைக்கவும், குளித்த பிறகு துவட்டவும், முடியாதது மட்டுமல்ல, வேறு எதற்கும் பயன்படாத, இன்றைய மலிவான பொன்னாடை என்ற ஜரிகை சால்வையை ஆடையாக தைத்து உடுத்தவும் முடியாது, அழகு நகை ஆபரணமாக அணிந்து கொள்ளவும் முடியாது!

எனவே எல்லா நிகழ்ச்சிகளிலும் அதை ஒரு சடங்காக அணிவிப்பவர்கள் மறு சிந்தனை செய்யுங்கள். சடங்குப் பொன்னாடைகளைத் தவிர்த்து, இதர "பயனுள்ள' பரிசுகளை அளிக்கலாம்!

எந்தப் பயனும் இல்லாத பொன்னாடைகளைத் தவிர்த்து, வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிடவும், அடுத்த தலைமுறைக்கு நூல்களின் அவசியத்தை உணர்த்திடவும், நாம் ஒவ்வொருவரும் நேசிக்க, பாராட்ட, வாழ்த்த, சிறப்பிக்க நினைப்பவர்களுக்குப் புத்தகங்களை வழங்குவோம். அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக இருப்போம்.

No comments:

Post a Comment

Madras HC Justice Seshasayee retires

Madras HC Justice Seshasayee retires TNN | Jan 8, 2025, 03.58 AM IST  Chennai: A judge might possess the power of a giant, but should not ac...