Friday, February 23, 2018


திரையில் தெரிந்த உங்களின் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றி பெறட்டும்: கமலுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து

Published : 22 Feb 2018 19:39 IST

சென்னை



பாரதிராஜா, கமல்ஹாசன் | கோப்புப் படம்.

ஒரு தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்ஹாசன். திரையில் தெரிந்த தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக கமலுக்கு இயக்குநர் பாரதிராஜா எழுதிய கடிதத்தில், ''அறிவாளியாய் இருப்பதை விட புத்திசாலியாய் இருக்கிறவன் தான் ஜெயிப்பான் என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ்நாடு சாதி, இனம், மதம் என்ற வேற்றுமைகளால் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. இவை அத்தனையையும் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு.

கரை வேட்டி கட்டி, கட்சிக் கொடி பிடித்து, மேடை போட்டு, மைக் பிடித்து பேசுவது மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பிரச்சாரம் அல்ல! திரைப்படத்தின் மூலமும் சமூக அரசியல் கருத்துகளைச் சொல்லலாம்.

என் திரைப்படங்களை சென்சார் செய்யாமல் திரையிட அனுமதித்தால் ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியமைக்கிறேன் என்றாராம் அறிஞர் அண்ணா.

கமல்ஹாசனும் தன் திரைப்படங்களின் மூலம் சமூக கருத்துகளை விதைத்தவர்தான். தன் நற்பணி மன்றம் மூலம் மக்கள் பணியாற்றியவர்தான். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் நற்பணிகள் செய்தவர் அல்ல. உண்மையான தொண்டுள்ளம் கொண்ட காரணத்தால்தான் செய்தார். ஒரு தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்.

இன்று அரசியல், தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், போராட்டம் ஆகியவற்றோடு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

மக்கள் புரட்சியின் மூலம்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். உங்களின் மக்கள் நீதி மய்யத்தின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான் என்று பெர்னாட்ஷா கூறியுள்ளார்.

கமல், நீங்கள் செய்ய முடிந்தவர்.

திரையில் தெரிந்த உங்கள் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025