பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்புப் பணி ஒதுக்கீடு செய்வதற்கு, குலுக்கல் முறை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மார்ச் 5-ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 64 மையங்களில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, அறைக் கண்காணிப்பாளராக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக புதிய நடைமுறையின்படி குலுக்கல் முறையில் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த ஆண்டு வரை, விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்து வந்த நிலையில், தற்போது குலுக்கல் முறையில் தொலைதூரப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அறிந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இணை இயக்குநர் செல்வராஜ் கூறியது:
குலுக்கல் முறையில் சில ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் உள்ள பள்ளிகள் கிடைத்தால், அதனை மாற்றிக் கொடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
கடந்த தேர்வு வரை, சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், குறிப்பிட்ட ஆசிரியர்களை தங்கள் பள்ளி கண்காணிப்புப் பணிக்கு அழைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலேயே, நிகழாண்டு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment