Monday, March 2, 2015

பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலை. அறிமுகப்படுத்துகிறது



கலை அறிவியல் பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வருகிற 2015-16 கல்வி ஆண்டு முதல் இந்தப் புதிய வசதி பொறியியல் மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது. பாரம்பரியமான ஆசிரியர் சார்ந்த கல்வி முறை என்ற நிலை மாறி, மாணவர் சார்ந்த கல்வி முறை இப்போது பிரபலமடைந்து வருகிறது.

மாறி வரும் காலச் சூழல், தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை தாங்களாகவே மாற்றித் தேர்வு செய்து கொள்ளும் வகையிலான விருப்பப் பாடத் தேர்வு முறை (சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம்-சி.பி.சி.எஸ்.) பல கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, ஒரு படிப்பின் அடிப்படை பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் (கோர், அலைடு பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சி.பி.சி.எஸ். முறை.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலான கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதற்கென தனி வழிகாட்டுதலையும் யுஜிசி வெளியிட்டிருக்கிறது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திலோ அல்லது பொறியியல் கல்லூரிகளிலோ இந்த நடைமுறை இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

இருந்தபோதிலும், பிரபலமான சில தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் மட்டும் இந்த நடைமுறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர் கல்வி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும் என அண்மையில் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில், இந்தப் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் இப்போது முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 530 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், விருப்பப் பாடத்தைத் தாங்களே தேர்வு செய்துகொள்ளும் வசதி கிடைக்க உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியது: மாணவர்களுக்கான விருப்பப் பாடத் தேர்வு முறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அனைத்து நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதம் நடைபெற உள்ள பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

இதன்மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் அல்லது ஆர்வமுள்ள பாடங்களைத் தேர்வு செய்து படிக்க முடியும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...