Thursday, March 19, 2015

தேவைதானா தடை?

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே குஜராத்தில் நடைமுறையில் இருக்கும் சட்டம்தான் இது. ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட சில பாரதிய ஜனதா கட்சி அரசாளும் மாநிலங்களும்கூட இதே கருத்தைத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க. இறங்கியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அரசைச் சாடுகின்றன.

நான்கு வயது நிரம்பாத ஒரு மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை ஏற்கெனவே சட்டம் தடை செய்திருக்கிறது. கறவை மாடுகளைக் கொல்வதிலும் சில நிபந்தனைகளை வைத்திருக்கிறது. தற்போதைய சட்டத்தின்படி, மகாராஷ்டிரம், ஹரியாணாவில் மாட்டிறைச்சியை விற்றாலும், வைத்திருந்தாலும் குறைந்தது 10 ஆண்டுகள் தண்டனை என்பதுதான் எதிர்ப்பைக் கிளப்பி இருக்கிறது.

உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு (சுமார் 20 லட்சம் டன்) இந்தியாதான். இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 2011-இல் 1.9 பில்லியன் டாலரிலிருந்து 2013-இல் 3.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இப்போது சுமார் 5 பில்லியன் டாலராகி இருக்கக்கூடும்.

இந்தியாவின் 48% தோல் ஏற்றுமதி தமிழ்நாடு மூலம் நடைபெறுகிறது. இதில் 30% தோல் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தோல் தொழிற்கூடங்களில் பாதிப்பு கணிசமாக இருக்கும்.

மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வதன் நோக்கம் - பசுக்கள் கொல்லப்படுவதை முழுமையாகத் தடுப்பதற்காகத்தான். பசுவதை என்பது காந்தி காலத்திலிருந்தே மிகப்பெரும் விவாதமாக இருந்து வருகிறது. பசுவதை கூடாது என்பதை ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரமா, பசுவதைத் தடுப்பா என்பதில் பின்னதுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு முதல்நாள் பசுவதைத் தடுப்பு மாநாடு நடத்தப்படுவதை வழக்கமாக்கி இருந்தார் காந்தியடிகள் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நமது அரசியல் சட்டத்தின் 48-ஆவது பிரிவான அரசுக்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறையில் பசுவதைத் தடுப்பு என்பதும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பசுக்களும் விவசாயத்திற்கு பயன்படும் ஏனைய கால்நடைகளும் கொல்லப்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பசுவதைத் தடுப்பு இடம் பெற்றிருந்தது என்பது மட்டுமல்ல, நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பசுமைப் புரட்சிக்கும், வெண்மைப் புரட்சிக்கும் பதிலாக இறைச்சி ஏற்றுமதியை ஊக்குவித்து "சிவப்புப் புரட்சி' (பிங்க் ரெவல்யூஷன்) செய்து கொண்டிருக்கிறது என்று சாடியிருந்தார். மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி பா.ஜ.க. பசுவதைத் தடை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைத் தடை மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது என்பதுதான் உண்மை. அந்தக் கருத்துடன் நாம் உடன்படாமலிருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தை பா.ஜ.க. இந்தப் பிரச்னையில் பெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மிருகங்களின் வதைக்குத் தடை விதித்திருக்கின்றன. யூத மதத்துக்கு எதிரானது என்பதால் இஸ்ரேலில் குதிரை மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கம்யூனிஸ நாடான கியூபாவில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஏதோ இந்தியாவில் மட்டுமே மத நம்பிக்கையின் அடிப்படையில் பசுவதையும், மாட்டிறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூக்குரலிடுவது அர்த்தமற்றது.

மாமிசத்துக்கான நீர்த் தேவை மிக அதிகம். ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்திக்கு செலவாகும் தண்ணீர் 15,415 லிட்டர். ஆட்டிறைச்சிக்கு 8,763, பன்றி இறைச்சிக்கு 5,988 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. தாவர உணவுகளுக்கான நீர்த் தேவை, ஒரு கிலோ பருப்பு உற்பத்திக்கு அதிகபட்சமாக 4,000 லிட்டர்தான். மற்ற காய்கறிகளுக்கு அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு 800 லிட்டர் தண்ணீர் தேவை. நீர்த் தேவை குறித்த விழிப்புணர்வு மூலம் மக்களை சைவ உணவுக்கு மாற்றுவது இயலும். ஆனால், சட்டம் போட்டு மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக ஆடு, கோழியை விடுத்து, வெறும் மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வது பயனற்றது.

அடிமாடுகள் லாரிகளிலும், படகுகளிலும் மிக மோசமான முறையில் கொண்டு செல்லப்படுகின்றன. வலியில்லாமல் கொல்லும் முறை கையாளப்படுவதில்லை. நோய் இல்லா மாடுகளின் இறைச்சி என்று சான்று வழங்குவதில் பெரும் ஊழல், முறைகேடுகள் உள்ளன. இத்தனை இருந்தபோதிலும், மாட்டிறைச்சி நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

இந்நிலையில், இத்தனை பேரையும் பகைத்துக் கொண்டு இத்தகைய சட்டம் கொண்டு வருவது அவசியம்தானா என்பதை வாக்குவங்கியை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இப்போதைக்கு இல்லை என்றாலும், பிறகு நிச்சயமாக ஏற்படலாம். கொள்கைக்காக அரசியலும், ஆட்சி அதிகாரமுமா, இல்லை, ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்கையா என்று பா.ஜ.க.வினர் திருப்பிக் கேட்டால் அதற்கு நம்மிடம் பதில் இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024