அண்மையில், வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும், தமிழகத்தில் ஓர் அரசியல் தலைவர் வெளிப்படுத்திய கருத்தையும் பலரும் கவனித்திருக்கலாம்.
சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் பேரனுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகளுக்கும் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
வட இந்தியாவில் இதுபோன்ற அரசியல் பண்பாடு நிலவுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அரசியலில் தனக்கு எதிராக இருக்கும் முலாயம் - லாலு இல்ல விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, சில நாள்களுக்குப் பிறகு நடைபெற்ற முலாயம்-லாலு இல்ல திருமண விழாவிலும் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அதே விழாவுக்கு வந்திருந்த தமது அரசியல் எதிரியான பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கைகளை வாஞ்சையோடு பற்றிக் கொண்டு மோடி நலம் விசாரித்தார். இதுதான் அரசியல் நாகரிகம்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அண்மையில், "தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்பது கசப்பான உண்மை' என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் குறைந்தபட்ச அரசியல் நாகரிகத்தைக் காண்பதே மிக அரிதான ஒன்றுதான்.
சுக, துக்க நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, அரசு விழாக்களில்கூட மாற்றுக் கொள்கையுடைய தலைவர்கள் ஒருசேர கலந்துகொள்வதே கிடையாது.
தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி சட்டப்பேரவை வரையிலும், கொள்கை அரசியலைத் தாண்டிய தனிநபர் மீதான விமர்சனங்கள் இங்கு அதிகம்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சட்டப்பேரவையில் முக்கிய விவாதங்களின்போது, எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தவறுவதில்லை.
இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கின்ற நிலையில், தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் கூட ஒருமித்த கருத்தையோ, தீர்மானத்தையோ ஏற்படுத்த முடியவில்லை.
நமது அண்டை மாநிலங்களில், வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு ஒருமித்த குரல் எழுப்பி போராடுவதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.
அண்டை மாநிலத் தலைவர்களுடன் ராஜாங்க ரீதியிலான நட்புறவு இல்லாததால் கர்நாடக, கேரள மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னை முடியாமல் நீடித்து வருகிறது.
ஆனால், நேற்று பிரிந்து சென்ற ஆந்திர மாநிலமும், தெலங்கானாவும், பிரச்னைகளை ஒரே நாளில் பேசித் தீர்த்து வருகின்றன.
ஆம், இருமாநிலங்களுக்கும் பொதுவான நாகார்ஜுனா அணை நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. உச்சகட்டமாக, அணைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருமாநில காவலர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
உடனடியாக, கல்வீச்சு, வாகனங்கள் உடைப்பு என வன்முறை பரவியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஏனென்றால், அணையில் மோதல் நடைபெற்ற மறுகணம், சமரச முயற்சியாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அதற்கு அடுத்த நாளே, இருமாநில முதல்வர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அணைப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதற்கும், தண்ணீரை பங்கிட்டுக் கொள்வதற்கும் அப்போதே கருத்தொற்றுமை ஏற்பட்டது.
இம்மாதிரியாக தமிழகப் பிரச்னைகளையும் தீர்க்க வேண்டுமென்றால், அண்டை மாநிலத் தலைவர்களுடனும், தேசியத் தலைவர்களுடனும், தமிழக அரசியல் தலைவர்கள் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு முன்னதாக, இங்குள்ள தலைவர்களிடையே ஒற்றுமையும், நட்புறவும் இருப்பது அவசியம்.
தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை என்னும் அதேவேளையில், எப்போதாவது அரிதிலும், அரிதாக நல்ல நிகழ்வுகள் சில நடைபெறுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
மதுஒழிப்பை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2013-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் அருகே நடைபயணம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மகிழுந்தை விட்டு கீழே இறங்கி வைகோவிடம் நலம் விசாரித்தார்.
இதைப்போலவே, அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில், திமுக தலைவர் கருணாநிதி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த காலங்களில் அரிதாக நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வுகள் இனி எப்போதும் நிகழ வேண்டுமென்றால், அனைத்து அரசியல் தலைவர்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
பொது மேடைகளில் மாற்றுக் கட்சித் தலைவர்களை அடைமொழி, புனைப்பெயரிட்டு ஒருமையில் பேசுவதை நமது தலைவர்கள் கைவிட்டாலே ஆரோக்கிய அரசியலுக்கான முதல் படியை எட்ட முடியும்.
அடுத்ததாக, சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்.
தனிப்பட்ட விமர்சனங்ளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு என்ற சொல் மக்களுடைய காதுகளில் இனி விழவே கூடாது.
தமிழகத் தலைவர்கள் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவை.
No comments:
Post a Comment