Wednesday, June 17, 2015

10ம் வகுப்பில் தேறாத மாணவி, பிளஸ் 2 தேர்வு எழுதியது எப்படி?

கரூர்:பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி, அதே பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து, தேர்வு எழுதி தோல்வியடைந்த விவகாரம், கரூர் மாவட்ட கல்வித்துறையில் பெரும் பிரச்னையாக கிளம்பியுள்ளது.கரூர் மாவட்டம், சோழவரம் பஞ்சாயத்துக்குட்பட்ட, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2013ல், மீனா என்ற மாணவி, ௧௦ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு முடிவு வெளியான போது, தமிழில், 44, ஆங்கிலத்தில், 22, கணிதத்தில், 35, அறிவியலில், 53, சமூக அறிவியலில், 35 மதிப்பெண் எடுத்து, தோல்வி அடைந்தார்.

அந்த மாணவி, அதே பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கப்பட்டு, அந்த வகுப்பில் தேர்ச்சி பெற்று, கடந்த, 2014--15ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதினார்.

அதிர்ச்சி:ஆனால், தேர்வில் தோல்வி அடைந்தார்; இருந்தும், பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த சான்றிதழை வைத்து, கரூர் மாவட்டம், சிவாயம் அருகே செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பித்தார்.அப்போது, மாணவியின் ௧௦ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை, பாலிடெக்னிக் நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

மாணவி கொடுத்த மதிப்பெண் சான்றிதழை, நிர்வாகத்தினர், கல்வித்துறையின் இணைய

தளத்தில் சரி பார்த்தபோது,

௧௦ம் வகுப்பு தேர்வில்,

மாணவி தோல்வி அடைந்திருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர், கரூர் மாவட்ட கல்வித்துறையில் புகார் தெரிவித்தனர்.இதில், ௧௦ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவியின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள, ஆங்கில பாடத்தின் மதிப்பெண், 22க்கு பதிலாக, 42 என்று, திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால், அருகில் எழுத்தால் எழுதப்பட்ட மதிப்பெண் விவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தும், அதேப்பள்ளி தலைமையாசிரியர் எந்த அடிப்படையில், மாணவியை, பிளஸ் 1 வகுப்பில் சேர்த்தார்; அதே கல்வியாண்டில், பிளஸ் 1 எப்படி தேர்ச்சி பெற்றார்.

விசாரணை;அதன்பின், பிளஸ் 2 வகுப்பில் சேர்க்கப்பட்டது, தேர்வு எழுத அனுமதித்தது உள்ளிட்ட விவகாரத்தில், பெரும் முறைகேடு நடந்துள்ளது என்பது, தற்போது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறுகையில்,“௧௦ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி, பிளஸ் 2 படித்ததாக புகார் வந்துள்ளது. நாளை (இன்று) முறைப்படி விசாரணை நடத்தப்படும்,” என்றார்.


சி.இ.ஓ.,வுக்கு தொடர் சிக்கல்கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது,கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில், 'வாட்ஸ் ஆப்' மூலம், வினாத்தாள் வெளியாகி, பெரும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, அங்கு, முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றியவர் ராமசாமி; அவர், தற்போது, கரூருக்கு மாறுதலாகி வந்துள்ளார்.

இந்நிலையில், கரூரில், ௧௦ம் வகுப்பு தேர்வில், தோல்வி அடைந்த அரசு பள்ளி மாணவி, பிளஸ் 2 வரை படித்த விவகாரம் கிளம்பியுள்ளது. இதனால், 'சி.இ.ஓ., ராமசாமியை, முறைகேடு மற்றும் விதிமீறல் தொடர்பான விவகாரங்கள், அவரை துரத்திக் கொண்டே உள்ளது' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024