விழுப்புரம்:மறுதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, பள்ளி மாணவர், மண்ணெண்ணெய் கேனுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த கோலியனுாரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், புருஷானுாரைச் சேர்ந்த தண்டபாணி மகன் மணிமாறன், 17, பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். ஆண்டு இறுதித் தேர்வில் வேதியியல் பாடத்தில் தோல்விஅடைந்துள்ளார். இதற்கான மறுதேர்வு, கடந்த 15ம் தேதி நடத்தப்படும் என, பள்ளியில் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, 15ம் தேதி, மணிமாறன் தேர்வு எழுத சென்றபோது, 12ம் தேதியே தேர்வு வைத்து முடித்து விட்டதாக, தலைமை ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார். அதிருப்தியடைந்த மணிமாறன், தனக்கு மறுதேர்வு வைக்க கோரி, விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேன், தன் சகோதரர் மணிவண்ணன் மற்றும் சிலருடன், நேற்று மதியம், 1:10 மணிக்கு வந்தார். அங்கு, போராட்டத்தில் ஈடுபட முயன்ற மணிமாறனை அழைத்து, சி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் புருஷோத்தமன், பிரச்னையை கேட்டறிந்தார்.
தலைமை ஆசிரியரிடம் பேசி, மறுதேர்வு நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, மணிமாறன் திரும்பிச் சென்றார். மண்ணெண்ணெய் கேனுடன் மாணவன், சி.இ.ஓ., அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமை ஆசிரியர் ரவி கூறுகையில், ''சி.இ.ஓ., உத்தரவைஅடுத்து, கடந்த 11, 12ம் தேதிகளில், பிளஸ் 1 வகுப்பிற்கான மறுதேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதுபற்றிய அறிக்கையை, அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளோம். பாதிப்புக்கு ஆளான மாணவருக்கு, மறுதேர்வு நடத்த தயாராக உள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment