Sunday, October 9, 2016

முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்...

நன்றி குங்குமம் தோழி

கல்வி வேலை வழிகாட்டி

பொதுவாகவே பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிப் படிப்பு தொடங்கும்பொழுது சில பிரச்னைகளை மாணவர்கள் சமாளிக்க வேண்டிவரும். அதிலும், பொறியியல் போன்ற தொழிற்படிப்புக் கல்லூரிகள் என்றால், கூடுதல் பிரச்னைகள் எழும். தொடக்கத்தில் குழப்பத்தையும் மிரட்சியையும்கூட பொறியியல் கல்லூரிகள் ஏற்படுத்தக்கூடும். அந்தச் சூழலைச் சமாளிக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னென்ன பிரச்னைகள் வரும்? அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும்?

பள்ளியில் தமிழ் பயிற்றுமொழியில் படித்தவர்களும், ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்தும் தமிழிலேயே சிந்தித்தும், புரிந்து கொண்டும் பழகியவர்களும் பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்திலேயே பயில வேண்டியிருப்பது திடீர் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் (பொறியியல் டிப்ளமோ படித்து விட்டு இரண்டாம் ஆண்டில் சேருபவர்கள் இப்பிரச்னையை அதிகமாகவே உணர்வார்கள்). இச்சங்கடம் முதல் சில நாட்களுக்குத்தான் இருக்கும். நாளடைவில் சரியாகிவிடும். இந்த மாற்றத்தை வெறுக்காமல் மனமுவந்து ஏற்று, விரைவில் பழகிவிட வேண்டும். புதிதாக எதிர்கொள்ளும் ஆங்கிலக் கலைச்சொற்களையும் கிரகித்துப் பயன்படுத்திப் பழக வேண்டும்.

ஆசிரியர்கள் கற்பிக்கும் வேகமும், மாணவர்கள் கற்கும் வேகமும் பள்ளிப்படிப்பின் போது இருந்ததை விடவும் கல்லூரியில் அதிகமாக இருக்கும். மாதம் ஒரு டெஸ்ட்டும், 4 மாதங்களுக்கு ஒரு செமஸ்டர் தேர்வும் வருவதால் பாடங்களை விரைவாக நடத்துவார்கள். ஒவ்வொரு மாணவனின் பேரிலும் ஆசிரியர் தனிக்கவனம் செலுத்த இயலாது. மாணவனே தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டிவரும். அதனால், ஓய்வைக் குறைத்து உழைப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். வகுப்பில் பாடக்குறிப்பை ஒழுங்காக எழுதிக்கொண்டு, கொடுத்த ‘வீட்டுவேலை’யை முறையாகச் செய்து, சந்தேகங்களை வகுப்பில் எழுப்பி, தெளிவு பெறுங்கள். தொய்வு ஏற்பட்டால், வார இறுதி விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) அதைச் சரி செய்து விடுங்கள். பொறியியல் படிக்க அறிவுக் கூர்மையைவிட, தள்ளிப்போடாமையே சிறந்த பலன் தரும்.

கிராமப்புறங்களில் இருந்து வந்து படிப்பவர்கள் புதிய சூழ்நிலையால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகலாம். தாழ்வு மனப்பான்மையும் உருவாகலாம். வீட்டு நினைவுகளும் வந்து, ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றும். இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான் என புரிந்துகொள்ள வேண்டும். ‘நாமாவது உள்நாட்டிலேயே இருக்கிறோம்... சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படிக்கப் போகிறவர்கள் எப்படி இருப்பார்கள்?’ என்று நினைத்துப் பார்த்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். பழகப் பழக இதுவும் சரியாகி விடும்.

ராகிங், ஈவ்டீசிங் ஆகியவை கடுமையாகத் தடுக்கப்பட்டிருந்தாலும் பல கல்லூரிகளில் அவை லேசாகத் தலை தூக்கக்கூடும். இவற்றை நகைச்சுவையாகக் கையாள முடிந்தால் சரி. வரம்பு மீறுவதாக இருந்தால், உரிய கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிடுங்கள். நிர்வாகம் உங்களைப் பாதுகாக்கும். சொந்த ஊரில் வீட்டிலிருந்தே பள்ளிக்குச் சென்று வந்த மாணவர்கள், இப்போது ஹாஸ்டலில் படிக்க நேர்ந்தால் மிரளுவார்கள்.

ஒரே அறையில் வேறு சில மாணவர்களுடனும் தங்க வேண்டி வரும். வகுப்புத் தோழர்களும், விடுதித் தோழர்களும் வெவ்வேறாக இருக்கலாம். சீனியர்களுடன் ஒத்துப்போக வேண்டியிருக்கும். குடும்ப சூழ்நிலைகளும், மொழிகளும், இனங்களும், பொருளாதாரச் சூழலும் வேறுபடலாம். இவற்றால் விடுதி வாழ்க்கை பிடிக்காமல் போகலாம். ஆனால், இவை அனைத்தையும் ரசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டால் விடுதி வாழ்க்கை இனிக்கும். பொறுமை, சகிப்புத்தன்மை, ஆளுமைத்திறமை, கூட்டுப்பொறுப்பு, பரந்த மனப்பான்மை ஆகிய அரிய பண்புகளைப் பெற விடுதி வாழ்க்கையை ஒருவாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் +1, +2 படித்தபோது, +2 பொதுத்தேர்வுக்கான பாடப்பகுதிகளைத் தவிர, மற்ற பாடங்களையும் பகுதிகளையும் முறையாகப் படிக்காமல் ஒதுக்கிய கூட்டத்தைச் சேர்ந்தவரா? அப்படியானால், உங்கள் உயர்கல்வி என்ற கனவுக்கட்டிடம் உறுதியான அடித்தளமின்றி ஆட்டம் கண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. கணிதம், இயற்பியல் பாடங்களில் +1, +2 வகுப்புகளில் ஒதுக்கி வைத்த பகுதிகளை முறையாகப் பயிலுங்கள். அவற்றோடு சேர்த்து மொத்தப் பாடத்தையும் ‘மீள்பார்வை’ செய்தீர்களானால், பள்ளி, கல்லூரி கற்றலுக்கு இடையே தொய்வு விழாமல் சரளமாகக் கல்லூரிப் படிப்பைத் தொடரலாம். நான்காண்டு காலத்தை முறையாகச் செலவிடுங்கள்... பிறகு நாற்பதாண்டு பணிக்காலத்தில் நிறைவாக வாழ்ந்திடுங்கள்!

வெ.நீலகண்டன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024