Monday, May 15, 2017

அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி; தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13–வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வற்புறுத்தி வந்தனர். 
 
சென்னை,

கோரிக்கைகளை வலியுறுத்தி 15–ந் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். எனவே இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை சென்னை பல்லவன் சாலையில் நேற்று மதியம் நடந்தது. இதில் பங்கேற்ற அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட 47 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இறுதிகட்ட பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.750 கோடியுடன் கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்க முதல்–அமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே தொ.மு.ச. தலைமையில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பல்லவன் இல்லத்தை விட்டு வெளியேறி, அருகில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களிடம் கேள்வி எழுப்பச்சென்ற நிருபர்களிடம், ‘‘ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையுடன் ரூ.500 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்க முடியும் என்றும், அதுவும் 3 மாதத்துக்கு பிறகு தான் சாத்தியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து நாங்கள் தனியாக பேசவேண்டியது உள்ளது. அதற்காகத்தான் செல்கிறோம். வந்து முடிவை சொல்கிறோம்’’ என்றனர்.

தோல்வியில் முடிந்தது
இதற்கிடையில் பல்லவன் சாலை பனிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த வழியாக சென்ற பஸ்களை நிறுத்தி கண்ணாடிகளின் மீது ‘நாமம்’ வரைந்தனர். 15–ந் தேதி (இன்று) முதல் பஸ்கள் ஓடாது என்று நோட்டீசும் ஒட்டினர். மேலும் பஸ்களின் டிரைவர்களை நோக்கி, ‘பயணிகளை இறக்கி விட்டு, ‘டெப்போ’வில் பஸ்சை நிறுத்துங்கள்’ என்று கூறிக்கொண்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் தொ.மு.ச. அலுவலகத்தில் கூட்டம் முடிந்த பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேலைநிறுத்தம் உறுதி
கோரிக்கைகள் நிறைவேறாமல் வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட முடியாது என்று அமைச்சரிடம் திட்டவட்டமாக கூறினோம். அரசு தரப்பில் இதற்கு எந்த பதிலும் வராததால் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.

அண்ணா தொழிற்சங்க பேரவை தொழிலாளர்களை வைத்து பஸ்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்த 3 நாட்கள் தொடர்ந்து பஸ்களை இயக்குவோம் என்று டிரைவர்களிடம் கையெழுத்தும் வாங்கி வருகின்றனர். கையெழுத்து போடவில்லை என்றால் இடமாற்றம் செய்வோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொழிலாளர் விரோத நடவடிக்கை.

திட்டமிட்டபடி போராட்டம்


எப்படியும் பஸ்களை இயக்குவது என்று அரசு முடிவு எடுத்திருக்கிறது. அதனை நாங்கள் முறியடிப்போம். திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும். எந்த பஸ்சும் நாளை (இன்று) முதல் ஓடாது. திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி முதல் போராட்டம் தொடங்கும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பஸ்கள் ஓடாததால் பயணிகள் பாதிப்பு

இதனால் வேலைநிறுத்தம் முன்னதாகவே தொடங்கியது. வேலைநிறுத்த அறிவிப்பு உறுதியானதும் சென்னை நகரில் நேற்று மாலை முதல் பஸ்களின் இயக்கம் பாதியாக குறைந்தது. கோயம்பேடு, பிராட்வே, கிண்டி உள்பட பஸ் நிலையங்களில் உடனடியாக சேவை நிறுத்தப்பட்டது. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் அவற்றில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். வெளியூர் செல்லும் பஸ்களில் நேற்று முன்பதிவு செய்திருந்தோருக்காக மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று முதல் வெளியூர் பஸ்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது.

இதேபோல் மற்ற ஊர்களிலும் நேற்று மாலை முதலே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடவில்லை.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘வேலை நிறுத்தம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் என்று தான் அறிவித்திருந்தார்கள். ஆனால் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் இப்போதே பஸ்களை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? போராட்டத்தில் ஈடுபடும் பஸ் தொழிலாளர்கள் பயணிகள் கஷ்டத்தை நினைக்கவில்லை. இது ஏற்கவே முடியாத ஒன்று’’ என்றனர்.

ஒரு லட்சம் போலீசார்
பஸ் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று மாலையில் இருந்தே ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்டனர்.

சென்னையில் 18 ஆயிரம் போலீசார் நேற்று மாலையில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் ஊர்க்காவல் படையினரும், ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர்.

சென்னையில் 32 பஸ் பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் நேற்று மாலையிலேயே பஸ்களை நிறுத்திவிட்டு ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இதனால் பஸ் பணிமனைகளிலும், பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

கைது நடவடிக்கை
பஸ் ஊழியர்கள் போராட்டத்தின்போது மறியல் செய்தல், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல், வேலை செய்யும் ஊழியர்களை தடுத்தல் போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்துப்பட்டு உள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல், பாதுகாப்போடு பஸ்களை இயக்க தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

CM: UGC draft rules blow to federal system

CM: UGC draft rules blow to federal system TIMES NEWS NETWORK  09.01.2025 Bengaluru : CM Siddaramaiah condemned the University Grants Commis...