Tuesday, July 25, 2017

ஓடும் நிலையில் திறந்து இருந்த பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி அதே வேன் அடியில் சிக்கி பலி: 2 பேர் கவலைக்கிடம்

2017-07-25@ 01:20:42

சென்னை:  சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கம் பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மாணவர்களை அழைத்து வர பள்ளி மற்றும் தனியார் வேன்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் ஊரப்பாக்கத்தில் இருந்து 13 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்றுகாலை தனியாருக்கு சொந்தமான வேன் காலை 8.30 மணிக்கு பள்ளியை நோக்கி படுவேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் 9 மணிக்கு பள்ளிக்கு ெசல்லும் அவசரத்தில் வேனை டிரைவர் கார்த்திக் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் மாணவர்கள் இருந்த வேன் வெங்கம்பாக்கம் கூட்டு சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. வழக்கமாக வேனில் மாணவர்கள் ஏறியவுடன் அதன் கதவை மூட வேண்டும். காரணம் வேன் வேமாக திரும்பும்போது மாணவர்கள் கீழே விழ வாய்ப்பு இருப்பதாலும், விதிமுறைகளின்படி வேனில் மாணவர்கள் இருக்கும்போது கதவு மூடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், மற்றப் பகுதிகளில் மாணவர்களை ஏற்றும் நோக்கத்தில் வேனின் கதவை டிரைவர் கார்த்திக் மூடவில்லை.

அப்பொழுது கேளம்பாக்கம் - வெங்கம்பாக்கம் சாலை சந்திப்பில் வேன் வந்தபோது திடீரென எதிரில் வந்த லாரியில் மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் வேனை இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது கட்டுக் கடங்காத வேகத்தில் வேனும் சென்றதால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திக் திடீரென பிரேக் போட்டு வேனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால், அதற்குள் வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்நிலையில் வேன் கதவு திறந்து இருந்த காரணத்தால் வேன் ஒரு பக்கமாக சாய்ந்ததால் அதில் இருந்த மாணவிகள் ஒருவர் மேல் ஒருவராக வெளியே தூக்கி வீசப்பட்டனர். இதனால் பல மாணவிகள் வேன் அடியிலும், சில மாணவிகள் வெளியேவும் விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதில் சில மாணவிகள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

இவர்களின் சத்தம் கேட்டு கூட்ரோடு பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்கள் வேனை தூக்கி அதன் அடியில் சிக்கியிருந்த ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி மயிலிமா நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கணேஷ் என்பவரின் மகள்களான 8ம் வகுப்பு மாணவி நேத்ரா (13), 4ம் வகுப்பு படிக்கும் ரோஷினி (9) ஆகியோர் இருவரும் வேனுக்கு அடியில் சிக்கினர்.  அவர்களை மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 8ம் வகுப்பு மாணவி நேத்ரா பரிதாபமாக உயிரிழந்தாள். ரோஷினியும் மற்றொரு மாணவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் காயம் அடைந்த 10 மாணவ-மாணவிகள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லைசென்ஸ் இல்லாத டிரைவர்

ஊனமாஞ்சேரி, பஜனை கோயில் தெருவை சேர்ந்த வேன் ஓட்டுநர் கார்த்திகேயன் (22) அவராகவே வந்து போலீசில் சரணடைந்தார். பின்னர் இது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது கார்த்திகேயனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார்த்திகேயனை வேலையில் சேர்த்ததற்காக ஊனமாஞ்சேரி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த வேன் உரிமையாளர் நித்தியானந்தம் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024