Monday, July 24, 2017

தென்னை மரங்களுக்கு லாரி தண்ணீர்... காப்பாற்ற முயற்சி! வறட்சியால் விவசாயிகள் கண்ணீர்

பதிவு செய்த நாள்24ஜூலை
2017
07:29




பொங்கலூர் : மழையின்றி தென்னை மரங்கள் காய்ந்து வருவதால், லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, தென்னை மரங்களை காப்பாற்ற இறுதி கட்ட முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

பொங்கலூர் வட்டாரத்தில், விவசாயத்திற்கு போதுமான நீராதாரம் இல்லை. எனவே, ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய இயலாமல் போனதால் கணிசமான பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டது. ஒவ்வொரு விவசாயியும் ஒரு குறிப்பிட்ட அளவு தென்னை மரங்களை வைத்துள்ளனர். அதுவே, அவர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.கடந்த, 2012 ஆம் ஆண்டில் இருந்து பருவ மழை பொய்த்தது. பொங்கலூர் பகுதியில் ஆண்டு சராசரி மழையளவு, 660 மி.மீ., ஆனால், கடைசி ஐந்தாண்டுகளில், சராசரி மழையளவு, 486 மி.மீ., ஆக குறைந்து விட்டது. இது வழக்கமாக பெய்யும் மழையில் கிட்டத்தட்ட, மூன்றில் ஒரு பங்கு குறைவாகும்.வடகிழக்கு பருவமழை ஏமாற்றியது என்றால், பி.ஏ.பி., நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் தென்மேற்கு பருவமழையும் சரிவர பெய்யவில்லை. இதனால், பி.ஏ.பி., தண்ணீரும் கிடைக்கவில்லை.விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பி ஓரளவு சமாளித்தனர். இப்போது, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், பல "போர்வெல்' வறண்டு விட்டன. எனவே, பல விவசாயிகள் தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்து, போர் போட்டு தென்னையை காப்பாற்ற முயன்றனர்.ஆனால், தண்ணீர் வரவில்லை. எனவே, கடைசி கட்ட முயற்சியாக தென்னையை காப்பாற்ற லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். நூறில் ஒரு விவசாயிக்கு மட்டும் அதிசயமாக தண்ணீர் உள்ளது. ஆனால், அவர்களும் விவசாயம் செய்வதை தவிர்த்து, நல்ல விலை கிடைப்பதால், தண்ணீர் விற்பனையில் இறங்கியுள்ளனர். அவற்றை தென்னை விவசாயிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து பொங்கலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:ஆயிரம் அடிக்கு கீழே "போர்' போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. இனி "போர்' போட்டால் தண்ணீர் வராது, என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். வரும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பருவமழை வரும் என நம்புகிறோம். அதுவரை தண்ணீர் விடாவிட்டால், தென்னை மரங்கள் கருகி, எங்களின் வாழ்நாள் உழைப்பு வீணாகி விடும்.எனவே, லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். விலை கொடுத்தாலும் அனைவருக்கும் நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. திருப்பூர் சாக்கடை நீர் செல்லும் நொய்யல் நதியோர கிணறுகளிலும், காங்கயம் சாக்கடை தேங்கி நிற்கும் பகுதிகளிலும் நிலத்தடி நீர் சிறிதளவு உள்ளது. அந்த தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றதுதான் என்றாலும், தென்னையை காப்பாற்ற வேறு வழியில்லை. எனவே, அதை வாங்கி நிலைமையை சமாளிக்கிறோம். இவ்வாறு, விவசாயிகள் கூறினர். .

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...