Tuesday, July 11, 2017

தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.75 வரை விற்பனை 
DINAKARAN

    
2017-07-11@ 03:03:46
புதுடெல்லி: நாடு முழுவதும் தொடர் விலையேற்றத்தில் தக்காளி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.75 வரை விற்பனையாகிறது. தக்காளியை அதிகமாக பயிரிடும் மாநிலங்களான கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் மழை காரணமாக போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இந்த காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்தபட்சம் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய் வரை தக்காளி விற்கப்படுகிறது.

இந்த மாநிலங்களில் தற்பொழுது மழை சற்று தணிந்து காணப்படுவதால் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: இந்திய மக்கள் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொல்கத்தாவில் கிலோ 75 ரூபாய்க்கும், டெல்லியில் 70 ரூபாய்க்கும் சென்னையில் 60 ரூபாய்க்கும் மும்பையில் 59 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த விலையில் மாற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.01.2026