Thursday, July 6, 2017

அரசு ஊழியர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மீது தீவிர கண்காணிப்பு: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை

By DIN  |   Published on : 06th July 2017 12:52 AM  

அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனைகள் மீது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர் டி.எம். பாசின், பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை அளித்த பேட்டி வருமாறு:
மத்திய நிதியமைச்சர் தலைமையின்கீழ் செயல்படும் பொருளாதார புலனாய்வு கவுன்சிலிடம் நேரிடையாக புகார் தெரிவிக்கும் அமைப்பாக நிதிப் புலனாய்வு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பானது, கருப்புப் பணம், குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்று சந்தேகப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த தகவலை சேகரித்தல், ஆராய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

அப்போது, அரசு ஊழியர்கள் தொடர்புடைய சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனைகள் இருக்கும்பட்சத்தில், அதுகுறித்த அறிக்கைகளை (எஸ்டிஆர்) மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு நிதி புலனாய்வு அமைப்பு அனுப்பி வைக்கும்.

அதாவது, சந்தேகப்படும்படி ரூ.10 லட்சம் அல்லது அதற்கு அதிக மதிப்புடைய தொகைகள் அரசு ஊழியர்களால் பரிவர்த்தனைகள் செய்யப்படும்போது, அதுதொடர்பான அறிக்கைகளை அனுப்பி வைக்கும்.

இதுபோல், அமலாக்கத் துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி, செபி அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு போன்ற அமைப்புகளுக்கும், மாநில தலைமைச் செயலர்களுக்கும் நிதி புலனாய்வு அமைப்பு எஸ்டிஆர் அறிக்கைகளை அனுப்பும். உச்ச நீதிமன்றத்தால் கருப்புப் பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும், நிதி புலனாய்வு அமைப்பிடம் இருந்து சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனை குறித்த விவரத்தை கேட்டுப் பெறும்.

ஊழல் செயல்களில் அரசு ஊழியர்களுக்கும், தனியாருக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கிதா? என்பதை தெரிந்து கொள்வதற்கு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனால், அரசுத் துறைகளில் ஊழல்களை தடுக்க முடியும்.

இதுபோல், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான வங்கி பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய தகவல்களை நிதி புலனாய்வு அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. அதன்மீது தேவைப்படும் நடவடிக்கைகளை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் எடுக்கும் என்று பாசின் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024