Saturday, July 1, 2017

President Election

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பது எப்படி : எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு விளக்க கடிதம்

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
01:22

சென்னை: ''ஜனாதிபதி தேர்தலில், எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்பதை விளக்கி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, கடிதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, இளஞ்சிவப்பு நிறத்திலும்; எம்.பி.,க்களுக்கு, பச்சை நிறத்திலும், ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.
தமிழக எம்.எல்.ஏ.,க்கள், வேறு மாநிலங்களில் ஓட்டளிக்க விரும்பினாலோ, எம்.பி.,க்கள் சென்னையில் ஓட்டளிக்க விரும்பினாலோ, வரும், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல், தேர்தல் கமிஷன் தயார் செய்து அனுப்பும்.
வாக்காளர் பட்டியல் வந்த பின், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கப்படும். அவர்கள் ஓட்டளிக்கும் போது, ஓட்டுச்சீட்டின் மேல் பகுதியில், பூத் சிலிப் எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில், எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்பதை விளக்கி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, கடிதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது; விரைவில் அனுப்பப்படும். 
தேர்தலுக்கான ஓட்டுப் பெட்டி, டில்லியில் இருந்து, 13ம் தேதி சென்னை வரும். கூடுதலாக, இரண்டு பெட்டிகள், தயார் நிலையில் வைத்துள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பவர்கள், தாங்கள் ஓட்டளிக்க விரும்பும் வேட்பாளர் பெயருக்கு நேராக, 1 என்ற இலக்கத்தை எழுத வேண்டும். ஒன்று என்ற இலக்கத்தை, ஒரே ஒரு வேட்பாளரின் பெயருக்கு நேராக மட்டும் குறிக்க வேண்டும்.
அடுத்து மற்ற வேட்பாளர்களுக்கு, விருப்ப வரிசைப்படி, அவர்களின் பெயருக்கு நேராக, 2, 3 என, இலக்க எண்களை எழுத வேண்டும். தேர்தல் அதிகாரிகள் வழங்கும் பேனாவை கொண்டே, தங்களுடைய ஓட்டை பதிவு 
செய்ய வேண்டும். வேறு பேனாவை பயன்படுத்தக் கூடாது. எந்த வேட்பாளரின் பெயருக்கு நேராகவும், ஒரு இலக்கத்திற்கு மேல் குறிக்கக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்களுக்கு நேராக, ஒரே இலக்கத்தை குறிக்கக் கூடாது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024