Monday, October 2, 2017

புற்றீசல் போல் பெருகும் மதுக்கடைகள்'மது'ரை:போதையில் பொங்கி வழியும் குடிமகன்கள்
பதிவு செய்த நாள்
அக் 02,2017 02:05



மதுரை;மதுரையில் மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் மீண்டும் புற்றீசல் போல் திறக்கப்பட்டு வருகிறது. போதையில் பொங்கி வழியும் 'குடிமகன்'களின் கூட்டத்தால் மதுரையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிய டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த பொதுமக்கள் புதிதாக அமைத்த மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர். இப்பிரச்னைக்கு பின் மதுக்கடைகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், மதுரையில் தற்போது மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் அடுத்து, அடுத்து மூன்று மதுக்கடைகள் 'பட்டை'யை கிளப்பிக் ண்டிருக்கிறது.குடிமகன்களின் தொல்லையால் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் பெண்கள் தலைகாட்ட அஞ்சுகின்றனர். திறந்த வெளி பார் போல் இங்குள்ள கடைகள் உள்ளன. உள்ளே இருந்து குடிப்பது யார், என்ன ரகம் குடிக்கிறார்கள் என்பது வரை பளிச் என தெரிகிறது. 

பஸ் ஸ்டாண்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் இதை வேடிக்கை பார்க்கும் அவலம் உள்ளது. இந்த கடைகளுக்கு எங்கும் இல்லாத வகையில் இரண்டு வழிப்பாதை வேறு. இதே, போல் மதுரை ஆத்திகுளம் - புதுார் ரோட்டில் வீடுகளுக்கு நடுவே, புதுநத்தம் ரோடு திருப்பாலை கோயில் மற்றும் பள்ளிக்கு அருகில், நரிமேட்டில் பள்ளி அருகே என, பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மதுக்கடைகள் தடையின்றி செயல்பட்டு வருகிறது.இது போன்ற பொது இடங்களில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என்று தெரிந்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடைகளை திறப்பது, திறந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. 

இந்த லட்சணத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. மது விஷயத்தில் அதிகாரிகள் மயங்கி விடாமல் மக்கள் கூடும் இடங்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மூடுவிழா நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024