Tuesday, October 3, 2017

தலையங்கம்
சிகிச்சையை விட தடுப்பதே மேல்!

அக்டோபர் 03 2017, 05:00 AM



தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் அறிக்கைகள்,
மறுஅறிக்கைகள், வாதங்கள், எதிர்வாதங்கள் என்று தினமும் அனல்பறக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் மக்களுக்கு இப்போது இதற்கெல்லாம் மேல் ஒரு அச்சமான உணர்வு ஏற்பட்டுள்ளது. அது வேகமாக தமிழ்நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சலால்தான். ஆஸ்பத்திரிகள் எல்லாம் டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. பல ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இல்லாமல், கீழே பாய்விரித்து படுக்கவைக்கும் நிலைமை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தினமும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நடந்துகொண்டு இருப்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 

உடல்வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல் ஆகியவைகள் இந்த நோய்க்கான அறிகுறி என்றாலும், உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்போது நிச்சயமாக அது டெங்கு காய்ச்சலின் அறிகுறிதான். நோய் தாக்கம் அதிகமாகி இருக்கிறது என்றால், தலைசுற்று, மயக்கம் ஏற்படும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் பிளேட் லெட் அதாவது தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறையும்.

வழக்கமாக ரத்தத்தில் 2½ லட்சம் எண்ணிக்கை என்றளவில் இருக்கவேண்டிய பிளேட் லெட்டின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழே போனால் சீரியஸ் என்றுதான் டாக்டர்கள் கருதுகிறார்கள். ஆனால், ரத்தஅழுத்தம் வேகமாக குறைவதும், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவதும், மூக்கில் ரத்தம் கசிவதும் வந்தால் கவலைக்கிடமான நிலைக்கு நோயாளிகள் போய்விடுவார்கள். டெங்கு பாதிப்புக்கு முக்கியமான காரணம் ஏடிஸ் இஜிப்டியை என்ற பெண் கொசுதான். மற்ற கொசுக்களைப்போல இவை இரவில் கடிப்பதில்லை.

பகலில்தான் கடிக்கிறது. இந்த கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். தேங்கி கிடக்கும் மழைநீர், மரப்பொந்துகளில் உள்ள மழைநீர், வீடுகளில் டயர்கள், பாத்திரங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரால்தான் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பூச்சியியல் வல்லுனர்கள் மற்றொரு காரணத்தை கூறுகிறார்கள். இந்தியன் டைப் கழிப்பிடங்களில் இந்த ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு அவைகள் செப்டிக் டேங்க்குகளில் போய் ஏராளமாக உற்பத்தியாகி கழிப்பறைகளின் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் முனைகளில் உள்ள துவாரங்கள் வழியாக வெளியே போய்விடுகின்றன.

எனவே இவற்றை கொசுக்கள் வெளியே போகாதபடி, நுண்ணிய துவாரங்கள் கொண்ட வலையால் மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். ‘குணமாக்குவதைவிட, தடுப்பதே மேல்’ என்றவகையில், வீடுகளில் உள்ளவர்கள் கவனமாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பொறுப்பை சரியாக செய்யாததால்தான் டெங்கு இந்தளவுக்கு வேகமாக பரவிவருகிறது.

இந்த மழைக்கே ஆங்காங்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவைதான் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி தளமாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. சுகாதாரத்துறையால் நோய் வந்தபிறகு குணமாக்கும் பணியில்தான் ஈடுபடமுடியும்.

அதை வராமல் தடுக்கவேண்டும் என்றால் உள்ளாட்சி துறைகளின் வேகமான பணிகளில்தான் இருக்கின்றது. இந்த மழைக்கே இவ்வளவு டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது என்றால், இன்னும் வடகிழக்கு பருவமழை வரும்நேரத்தில் என்னவாகுமோ? என்ற அச்சம்தான் பொதுமக்களிடம் இருக்கிறது. பீதியடைய வேண்டாம் என்று வார்த்தைகளில் சொன்னால் பலனில்லை.

செயலில் காட்டவேண்டும். உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளில் உள்ள மேல்தொட்டிகள், கீழ்தொட்டிகளில் ஏடிஸ் கொசு முட்டைகளில் இருந்து புழுக்கள் வராமல் தடுக்கும் டெமிபாஸ் மருந்து தெளிக்கும் பணிகள், ஆறுகள், குளங்களில் வெக்டோ பாக் மருந்து தெளிக்கும் பணிகள், எம்எல்ஓ மருந்து தெளிக்கும் பணிகள், புரோபெக்சர் ஸ்பிரே அடிக்கும் பணிகள், டீசலுடன் கலந்து பைரிதிரம் புகை மருந்து அடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு டெங்கு காய்ச்சலை அடியோடு தடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024