Tuesday, October 3, 2017

மாவட்ட செய்திகள்

தாம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்


தாம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 03, 2017, 04:15 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை அலுவலகத்தில் தேசிய அளவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஒரே பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் மாலை வரை நடந்த இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்துராஜன், தேசிய துணை தலைவர் பிரகாசம் உள்பட ஏராளமான பெண் டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து நிருபர்களிடம் இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:–

மருத்துவர் பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் இருந்தாலும் தேசிய அளவிலே மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் ஒரே பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இதற்காக நாங்கள் ஒருவருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திலும் நாங்கள் தமிழகம் சார்பாக 15 பேர் சென்று கலந்துகொண்டோம்.

ஆனால் இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் காந்தி ஜெயந்தியான இன்று சத்தியாகிரக வழியில் தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம்.

கருவில் உள்ளது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை அறிய முடியாதபடி ஒரு தடைச்சட்டம் உள்ளது. அந்த தடைச்சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது. எனவே இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

அதேபோல இன்று மருத்துவ மாணவர்கள் ஒரு கல்லூரியில் தேர்ச்சிபெற்ற பிறகும் அதையும் தாண்டி நெஸ்ட் தேர்வு, எக்ஸிட் தேர்வு என்பதை கொண்டுவந்துள்ளனர். எத்தனைமுறைதான் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

உலக அளவிலே இந்திய மருத்துவர்கள் தான் தலைசிறந்த மருத்துவர்கள் என்று சொல்லும்போது இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்து ஏன் மாணவர்களை நசுக்க வேண்டும். எனவே இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024