அஞ்சுவது அஞ்சாமை பேதமை
- திருக்குறள்
கைப்புள்ளை போன்ற ஒருவர் தனது நண்பரிடம் கெத்தாகச் சொன்னாராம்: ‘பயம்கிறது என்னுடைய அகராதியிலேயே கிடையாது’. சொல்லி ஐந்தாவது நிமிடம் தெருவில் கடன் கொடுத்த ஒருவரைப் பார்த்து பயந்து ஓடித் தலைமறைவானார் அந்தக் கைப்புள்ளை. பூனைச் சத்தம் ஓய்ந்தவுடன் வளையிலிருந்து வெளியே வரும் எலியைப் போலே, வந்தவரிடம் நண்பர் கேட்டார் “என்னமோ பயம் என்கிற வார்த்தையே உங்க அகராதியில் இல்லைன்னீங்க?”. அவரும் அசராமல் சொன்னாராம் “எங்கிட்ட இருக்கறது ‘ஆங்கிலம்-ஆங்கில அகராதி’" என.
நம்மில் பலரும் இப்படித்தான் ‘தெனாலி’ படத்தில் கமல்ஹாசன் சொல்வதுபோல் பயத்தைத் தைரியமென்ற முகமூடி அணிந்து மறைக்கிறோம். பயப்படுவது கேலிக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால், பரிணாம வளர்ச்சியில் பயம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் தற்காப்புக்கான முக்கியமான ஒரு உணர்வு. மூளையில் பயப்படுவதற்கென்றே சில ஏரியாக்கள் அமைந்துள்ளன.
அமிக்டலா எச்சரிக்கை
மூளையிலே பாதாம் பருப்பு சைஸில் இருக்கும் ‘அமிக்டலா’ என்ற இடம்தான் பயத்தை உருவாக்குகிறது. அதனுடன் மூளையின் முன்பகுதியும் சேர்ந்துகொண்டு ஏதேனும் ஆபத்தைப் பார்த்தால் ‘போகாதே போகாதே என் கணவா’ எனக் காலைக் கட்டிக்கொண்டு தடுக்கின்றன. வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவுக்குச் செல்லும் வழியில் தந்தையைப் பார்த்துவிட்டால் அமிக்டலா அதிர்ச்சி அடையும்.
க்ளூவர், ப்யூசி என்கிற இரண்டு விஞ்ஞானிகள் குரங்குகளின் மூளையில் இந்த அமிக்டலா பகுதியை நீக்கிவிட்டு ஆராய்ச்சி செய்தனர். அப்போது குரங்குகள் முன்பு பயந்து ஓடிய விஷயங்களுக்கெல்லாம், இப்போது பயப்படாமல் ஜம்மென்று உட்கார்ந்திருந்தன. அதன்பின் இந்த பாதிப்புக்கு ‘க்ளூவர் ப்யூசி சிண்ட்ரோம்’ என்று பெயர் வந்தது.
இந்தப் பகுதி விபத்தினாலோ வேறு சில காரணங்களாலோ பாதிக்கப்பட்டாலோ ‘ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி’ எனச் சொல்லிவிட்டு கரண்ட் கம்பத்தில் கைவைப்பார்கள். மது அருந்தும்போது மூளையின் இந்தப் பேட்டைகளில் வேலை நிறுத்தம் செய்வதால்தான், பகலில் பைக் ஓட்டவே பயப்படுபவர் டாஸ்மாக்கிலிருந்து வெளிவந்தவுடன் டாங்கர் லாரியையே ஓட்டத் துணிகிறார்.
அச்சம் அவசியம்
எல்லா உயிரினங்களுக்கும் ‘தீங்கைத் தவிர்த்தல்’ (Harm avoidance) என்ற பண்பு அடிப்படையானது. இது குறையும்போது நமது செயல்களின், சூழலின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். தலைக்கவசம் அணியாமல் தலைதெறிக்க வண்டியோட்டுவது, அதீத நம்பிக்கையில் சில முட்டாள்தனமான முதலீடுகளைச் செய்வது, ஆளே இல்லாத ஊரில் டீக்கடை தொடங்குவது, நல்ல பாம்புக்கு முத்தம் கொடுப்பது, மலை உச்சியில் செல்ஃபி எடுப்பது, இன்னும் சிலர் தன்னையே ஹீரோவாக்கி தானே திரைப்படம் எடுத்துக்கொள்வது , கவிதை எழுதுவதுடன் நின்றுவிடாமல் அதைப் புத்தகமாக வெளியிடுவது எனத் தனக்கும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இப்படிப்பட்டதுதான். ‘மேனியா’ (Mania) என அழைக்கப்படும் மன எழுச்சி நோயாலும் இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என திருக்குறள் அருமையாகச் சொல்கிறது. எப்போதும் அச்சம் தேவையற்றது எனச் சொன்னாலும், அச்சம் ஒரு அவசியமான ஆதார உணர்வு. அடிக்கடி செய்தித்தாள்களில் விபத்துச் செய்திகளைக் காண்கிறோம். ஆனால், தலைக்கவசம் அணியச் சொன்னால் மறுக்கிறோம்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தளங்களில் உள்ள ஏரிகளுக்குச் சென்று படகுச் சவாரி போகும்போது ‘லைஃப் ஜாக்கெட்’ எனப்படும் உயிர்காக்கும் உடையைக் கேட்டுப் பாருங்கள். ஏதோ புகாரி ஓட்டலுக்குச் சென்று புளியோதரை கேட்பவரைப் போல் நம்மை விசித்திரமாகப் பார்த்தவாறே, எங்கோ ஏழு கடல் ஏழு மலை தாண்டிக் கிடக்கும் ஒரு பழைய உடையைக் கொடுப்பார்கள். அதுவும் பாதி பிய்ந்துபோய் அரைகுறையாகத்தான் இருக்கும்.
ஆனால் ஏதேனும் விபத்து நடந்துவிட்டால் அரசாங்கம் சரியில்லை, நிர்வாகம் ஒழுங்கில்லை எனப் போராட்டம் நடத்துவோம். இதுபோன்றே மின்சாதனங்களைப் பயன்படுத்துவது, கட்டிடங்களில் தீயணைப்பு சாதனங்கள் அமைப்பது எனப் பல விஷயங்களிலும் நாம் அஞ்சுவதற்கு அஞ்சாமல் இருக்கிறோம். முதலில் பயப்படுவதற்கு யோசிக்காமல் தைரியமாகப் பயப்படுங்கள்!
அப்படியானால் எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டே இருக்க வேண்டியதுதானா? நிச்சயமாக இல்லை. அச்சமின்மையைப் போல் அச்சமும் அதிகமானால், நமக்குப் பாதிப்புதான். அதைப் பற்றித் தனியாகப் பேசுவோம். இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அவசியம். ஆனால் காரோட்டும்போதும் அணிந்திருந்தால் அது அதீத அச்சம். ‘அச்சம் தவிர்’, ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள ‘சமநிலை’ தான் நமக்கு நலம்தரும் நான்கெழுத்து.
(அடுத்த வாரம்: அச்சம் என்பது மடமை தானா?)
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
No comments:
Post a Comment