தென் கொரியாவில் வசித்துவந்த அந்தத் தம்பதி, அவசரமாக ஊரைவிட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. மூன்று மாத கைக்குழந்தை வேறு. அவர்கள் காதல்கூட இன்றைய பாணியில் இண்டர்நெட் ‘சாட்’ மூலமாக மலர்ந்ததுதான். இருவருமே வீடியோ கேம் பிரியர்கள். அவர்களை ஒன்றிணைத்ததும் அதுதான். இப்போதுகூட சுமார் 9 மணி நேரம் இணைய மையத்தில் விளையாடி விட்டுத்தான் வீட்டுக்கே வந்தார்கள். ஆனால், அந்த வீடியோ கேமே அவர்களின் சிறை வாழ்க்கைக்குக் காரணமாகப் போகிறது என்று தெரிந்ததால், அகப்படாமல் இருக்க தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு இணையத்தில் மிகவும் பிடித்த விளையாட்டு ‘அனிமே’. இது ஒரு ‘ரோல் பிளேயிங்’ விளையாட்டு. அதாவது, இணையத்தில் சைபர் வெளியில் உங்களுக்கான ஒரு கதாபாத்திரத்தை (அவதார்) நீங்களே உருவாக்கிக்கொண்டு விளையாடுவது (இவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்). இந்த அனிமே விளையாட்டில், நீங்கள் ஒரு குழந்தையை உண்மையான குழந்தைபோல வளர்க்க வேண்டும். அதைக் குளிப்பாட்டுவதில் தொடங்கி, அதை அழகுபடுத்துவது, மெள்ள அதற்காக ஒரு உலகையே உருவாக்குவதுவரை, நீங்கள் தீர்மானிக்க வேண்டும். மெய்யாகவே குழந்தையை வளர்ப்பது போல, இங்கு ‘வர்ச்சுவல்’ ஆக வளர்க்க வேண்டும். அது பல சவால்கள் நிறைந்தது. சவால்களுக்கேற்ப பாயிண்ட் கிடைக்கும். பாயிண்ட்களுக்கு ஏற்ப அடுத்த கட்டத்துக்கு நகரலாம்.
வினையான வர்ச்சுவல் குழந்தை
இந்த விளையாட்டை இணையத்தில் விளையாடியபோது அவர்கள் இருவருக்கும் குழந்தையின் மீது ஆசை பிறந்தது. நிஜ வாழ்க்கையிலும் அழகான பெண் குழந்தையைப் பெற்றுக்கொண்டார்கள். நாட்கள் நகர நகர இந்த விளையாட்டுக்கு அவர்கள் அடிமையாகிவிட்டார்கள்.
வேலை போனது, கவலைப்படவில்லை. தங்கள் சேமிப்பில் இருந்து செலவழித்தார்கள். நீண்ட நேரம் விளையாடியதில் உணவு, உறக்கம் என அனைத்தையும் மறந்தார்கள். கூடவே பிறந்த குழந்தையையும் மறந்துவிட்டார்கள். விளைவு, போதுமான உணவு, கவனிப்பு இல்லாமல் குழந்தை ஊட்டசத்துப் பற்றாக்குறையால் இறந்துவிட்டது.
இணையத்தில் தங்கள் கற்பனைக் குழந்தையை வெற்றிகரமாக வளர்த்த மகிழ்ச்சியில் இருந்த அவர்கள், சற்று தாமதமாகத்தான், ரத்தமும் சதையுமான தங்களின் நிஜக் குழந்தை இறந்து கிடப்பதைப் பார்த்தார்கள். விஷயத்தை மூடி மறைக்க முடியாது, கைது நிச்சயம் எனத் தெரிந்தது. தப்பித்து ஓடத் தீர்மானித்தார்கள். ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
எப்படி மீட்பது?
போலீஸ் அவர்களைக் கைதுசெய்துவிட்டது. கைதான பிறகு, ‘சொர்க்கத்தில் என் குழந்தை நலமாக வளரும்’ என்று மட்டும் அந்தக் குழந்தையின் தந்தை கூறினார். இந்தச் செய்தியைக் கேட்டு, உலகமே உறைந்து போனது.
தென்கொரிய அரசாங்கம் உடனடியாக நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. மன நல மருத்துவர்கள், மன நல ஆலோசகர்கள், கல்வியாளர்கள், குழந்தை நல மருத்துவர்கள், டிஜிட்டல் நிபுணர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். தங்கள் நாட்டுச் சிறுவர்களும் இளைஞர்களும் வீடியோ கேமுக்கும் இணையத்துக்கும் எந்த அளவுக்கு அடிமையாகி உள்ளனர், அவர்களை எப்படி மீட்டெடுப்பது - இதுதான் அந்நாட்டு அரசு அந்தக் குழுவிடம் கேட்ட முக்கியமான கேள்வி.
இதன் பின்னர் உலகம் முழுவதும் இணையப் பயன்பாடு, வீடியோ கேம் தொடர்பான ஆய்வுகள் நிறைய வந்தன, வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
(அடுத்த வாரம்: கேமிங் உலகின் ஜி.டி.பி!)கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்தொடர்புக்கு: write2vinod11@gmail.com
No comments:
Post a Comment