Wednesday, October 25, 2017

நலம்தரும் நான்கெழுத்து 05: கோபம் எனும் கொதிநிலை


“குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமெனும் காத்தல் அரிது”

மேலே குறிப்பிட்டுள்ள குறளுக்கு விளக்கம் ‘நல்ல குணம் எனும் குன்றின் மேல் நிற்பவர்கள், ஒரு கணம் கூடக் கோபப்படக் கூடாது’ என்பதே. வெகுளி என்றால் சினம். தற்போது அதன் பொருளை அறியாமலேயே வெகுளித்தனமாகப் பயன்படுத்தி வருகிறோம். நல்ல இலக்கியத்தின் அழகு, சொல்லாமல் சொல்வது.
நல்ல பேர் எடுப்பது என்பதைக் குன்றின் மீது ஏறுவதற்கு உவமையாகச் சொல்லும்போதே ஒரு கணப்பொழுதின் சினம்கூட அக்குன்றிலிருந்து நம்மைப் பாதாளத்துக்குத் தள்ளிவிடும் என்னும் பொருள் இதில் மறைந்திருக்கிறது. பல வருடங்களாக மலையேறுவதுபோல் சேர்த்த நற்பெயர், உறவுகள் எல்லாமே ஒரு கண நேரக் கோபத்தில் மலையிலிருந்து வீழ்வதுபோல் எளிதாக வீழ்ந்துவிடும்.

ஏமாற்றம் தரும் கோபம்

கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாகப் பார்த்தால் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்குப் போட்டியாக வருபவர்களைப் பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல்.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்குப் பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம். ஆக, எல்லாக் கோபத்துக்குப் பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது.

ஆறட்டும் சினம்

கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாகக் குறைந்துவிடுகிறது.
கோபத்தைக் குறைப்பதற்கும் அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூடக் கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூடக் கடுங்கோபம் ஏற்படுகிறது. அதனால்தான் ஒரு திரைப்படத்தில் காலையில் அப்பாவி அம்பியாக அப்பா, அம்மாவுக்கு ஆரத்தி எல்லாம் எடுக்கும் வடிவேலு, அந்தி சாய்ந்தபின் அந்நியனாகி மதுவின் விளைவால் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்.
கோபப்படும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தம் எகிறும். இதயம் கண்டபடி துடிக்கும். கோபம் வரும்போது உடல் கொதிக்கத்தான் செய்கிறது. அதனால் தான் ‘ஆறுவது சினம்’ என அவ்வை ஆச்சி கூறுகிறாள்.

கோபம்… அனிச்சைப் பழக்கம்!

அளவுக்கு அதிகமான கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தைத் தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்கத் தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும். வீட்டினுள் நுழைந்ததும் நாற்காலி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஒருவர். அவ்வாறு இல்லை என்றவுடன் உடனே ஏமாற்றம் வந்து கோபமாக வெடிக்கிறது. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏமாற்றமும் வராது. கோபமும் வராது.
இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தைத் தொட்டவுடன் கை அனிச்சையாகப் பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாகக் கோபப்பட்டு பலரும் பழகியிருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம். ‘ஆத்திரமடையும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறோம்’ என எமர்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே.
அதற்காகக் கோபம் என்பதே கூடாதா எனக் கேட்டால், அதுதான் இல்லை. நியாயமான காரணங்களுக்காகச் சரியான முறையில் கோபம் கொள்ளவே வேண்டும். அதுதான் உண்மையான நலம் தரும் நான்கெழுத்தான சமநிலை. அது பற்றி அடுத்த பகுதியில். அது வரை கோபப்படாமல் கொஞ்சம் காத்திருங்கள்.
(அடுத்த வாரம்: ரெளத்திரம் பழகலாமா? )
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...