கந்துவட்டிக் கொடுமை: இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது அரசு!
Published : 25 Oct 2017 10:05 IST
கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து அவரது மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளித்தது நம் அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்திருக்கிறது. தாயுடன் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். கந்துவட்டியின் கொடுமையைக் குறித்து, காவல் துறையிடம் மனு கொடுத்தும் பலனில்லை, அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் ஆறு முறை மனு கொடுத்தும் பலனில்லை என்ற நிலையிலேயே இந்த மிக மோசமான முடிவை இசக்கிமுத்தும் அவரது மனைவியும் எடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தவொரு சிக்கலுக்கும் தற்கொலை தீர்வல்ல. அதே நேரத்தில், இப்படியொரு கொடுமையான முடிவை நோக்கி அந்தக் குடும்பம் தள்ளப்பட்டிருப்பதற்கு என்ன காரணம், யார் காரணம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
அரசு அதிகாரிகளின்காரிகளின் பொறுப்பற்ற தன்மையே இந்தத் தற்கொலைக்கு முக்கியக் காரணம். மாவட்ட ஆட்சியர்கள் தமக்கு வரும் புகார்களை நேரடியாகத் தலையிட்டு தீர்வு அளிக்காமல் சம்பந்தப்பட்ட துறைக்கே அனுப்பிவைக்கும் முறையானது, தீர்வளிப்பதற்குப் பதிலாக புகார் அளிப்பவரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
அதே திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு இளங்கோ என்ற பள்ளி ஆசிரியர் கந்துவட்டிக் கொடுமையால் விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டிக் கொடுமைகளின் காரணமாகத் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தமிழக அரசு 2003-ம் ஆண்டில் கந்துவட்டித் தடுப்புச் சட்டத்தை அவசரச் சட்டமாக இயற்றி, அதே ஆண்டிலேயே சட்டமாகவும் இயற்றியது. அச்சட்டத்தின் பிரிவு 9-ன்படி வட்டிக்குக் கடன் வாங்கியவர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வட்டிக் கொடுமையின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டால், அது தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகும் என்று கூறுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தின்படி இதுவரையில் நடந்த குற்றங்கள் நீதிவிசாரணைக்கு முறையாக உட்படுத்தப்பட்டிருந்தால் கந்துவட்டி தற்கொலைகள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை. அது பெயரளவிலான சட்டமாகவே அமைந்துவிட்டது.
2014-ல் சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து கந்துவட்டிக் கொடுமைகள் குறித்த வழக்கைப் பதிவுசெய்து அரசிடம் விளக்கம் கேட்டது. கந்துவட்டிக்குக் கடன் கொடுத்துக் கொடுமை புரிபவர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யக் கூடாது என்ற கேள்வியையும் உயர் நீதிமன்றம் எழுப்பியிருந்தது. அதன் பிறகாவது தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அரசின் முடிவுகளை எதிர்த்துப் போராடுபவர்களை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கும் குண்டர் சட்டமும் காவல்துறையும் கந்துவட்டிக்குக் கடன் கொடுப்பவர்களைக் கண்டுகொள்வதேயில்லை. பல இடங்களில் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாகக் காவல் துறையே செயல்படுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தின்படியே வட்டிக்குக் கடன் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், கந்துவட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் மீட்டர் வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் வகையில் வட்டியை வசூலிக்கிறார்கள். கடன்பட்டவர்கள் ஒருபோதும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். கடன் கொடுத்தவர்கள் செய்யும் கொடுமைகளைச் சமாளிக்க முடியாமல்தான் ஒரு கட்டத்தில் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். ஒருசிலர், சட்டரீதியான தீர்வுகளுக்கு முயன்று பார்த்தாலும் அதற்குக் காவல் துறையினரே ஆதரவாக இருப்பதில்லை.
எதிர்பாராத மருத்துவச் செலவுகளும், அவசியமான வாழ்க்கைச் செலவுகளும்தான் கடனை நோக்கித் தள்ளுகின்றன. வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அங்கீரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் எதுவும் ஏழைக் கடனாளிகளைக் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. அநியாய வட்டிக்கு மக்கள் கடனாளிகளாகி நிற்பதற்கும், வட்டிக் கொடுமையால் அவர்கள் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுவதற்கும் அரசே பொறுப்பு என்று மக்கள் குமுறுவதில் உள்ள நியாயத்தை யாராலும் புறக்கணித்துவிட முடியாது. அதிகாரமும் பணபலமும் இல்லாத ஏழை எளிய மக்களின் பிரதானமான பாதுகாவல் அமைப்புதான் அரசு. ஆனால், யாருக்காக இருக்கிறதோ அவர்களின் முறையீடுகளையே காதுகொடுத்துக் கேட்காத அரசு அமைப்புதான் இங்கு நடைமுறை யதார்த்தம். அனிதாவில் ஆரம்பித்துத் தற்போது இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் வரை தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுதான் அரசின் கவனத்தையும் சமூகத்தின் கவனத்தையும் தங்கள்பால் இழுக்க வேண்டும் என்ற நிலை எவ்வளவு கொடியது! ஒவ்வொரு ஏழைக் குடிமகன் நெஞ்சிலும் இதுபோன்ற சம்பவங்கள் எவ்வளவு அவநம்பிக்கையை விதைக்கின்றன என்பதை அரசு இன்னமும் உணராமல் இருப்பதுதான் எல்லாவற்றையும் விட பேரவலம்.
வலியோரையும் செல்வாக்குள்ளோரையும் காப்பவையாக அரசும் காவல் துறையும் மாறிவிட்டது என்ற எண்ணம் பெரும்பாலானோரின் மனதில் உறுதிப்படுவதற்கு இதுபோன்ற நிகழ்வுகளே காரணம். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்துள்ள இந்தத் தீக்குளிப்பு சம்பவமே இறுதியாக இருக்கட்டும். அரசு இனிமேலாவது தனது கருணையில்லாத மனப்போக்கிலிருந்து விடுபட்டு, கடனில் சிக்கித் தவிக்கும் ஏழை எளியவர்களைக் காக்க முன்வர வேண்டும். மக்கள் மேல் துளியாவது அக்கறை இருந்தால், சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தும் தங்குதடையில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்துவட்டிக் கொடுமைக்கு அரசு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!
No comments:
Post a Comment