Friday, October 6, 2017

'சென்னையிலிருந்து பதில் வரவில்லை': கர்நாடக சிறைத்துறை விளக்கம்
பதிவு செய்த நாள்06அக்
2017
03:41




பெங்களூரு: ''சசிகலா தாக்கல் செய்த, 'பரோல்' மனு தொடர்பாக, சென்னை நகர போலீஸ்கமிஷனரிடமிருந்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வரவில்லை,'' என, பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர், சோமசேகர் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சை :

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சசிகலா. இவரின் கணவர் நடராஜன், கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக, 15 நாட்கள், பரோல் கேட்டு, சசிகலா விண்ணப்பித்திருந்தார். போதிய ஆவணம் இல்லாததால், மனு நிராகரிக்கப்பட்டது.

சிறைத்துறை கேட்ட ஆவணங்களுடன், இரண்டாவது முறையாக, நேற்று முன்தினம், மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த சிறைத்துறை, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் கேட்டு, சென்னை போலீஸ் கமிஷனருக்கு நேற்று முன்தினம் இரவே கடிதம் எழுதியிருந்தது.

'சென்னை கமிஷனர் வழங்கும் பதிலை வைத்தே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர் சோமசேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசிகலாமனு மீது, கர்நாடக சிறைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற தகவல் பரப்பப்பட்டது.

தகவல் :

இது தொடர்பாக,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, ''சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நேற்று முன்தினமே கடிதம் அனுப்பி விட்டோம். அவரது உதவியாளரும், அதை உறுதிப்படுத்தினார்; ஆனால், இதுவரை பதில் வரவில்லை,'' என்றார்.

இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாத்திடம் விசாரித்த போது, ''கவர்னர் தொடர்பான நிகழ்ச்சிகளில் இருப்பதால், பரோல் குறித்த தகவல் எதுவும் எனக்கு தெரியவில்லை; இது குறித்து, பின்னர் பேசுகிறேன்,'' என்றார்.

இதற்கிடையே, சசிகலா பரோலில் விடுவிக்கப்பட்டால், சென்னை, தி.நகரிலுள்ள வீட்டில் தங்கவுள்ளதாக, அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக, கர்நாடக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024