Thursday, October 26, 2017


தமிழகம் முழுவதும் 1094 மருத்துவர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்


By DIN  |   Published on : 26th October 2017 02:09 AM  |
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 1094 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜை மற்றும் கால்கோல் நடும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் இணைந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக செயலாற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 
மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு இன்னும் குறையவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையை மாற்றுவதற்கு அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காய்ச்சலின் அறிகுறி இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். இவைதவிர, டெங்கு காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டால் ஊசி போடுவதை தவிர்க்க வேண்டும். 
சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆய்வு செய்தபோது, டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிகமாக இல்லை, இருப்பினும் இந்நிலையை அடுத்து டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களுக்கு கடந்த மாதம் 1113 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணியாளர் பற்றாக்குறை உள்ளதாக வந்த புகாரை அடுத்து, புற ஆதாரமுறையில் 300 லேப் டெக்னீசியன்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவை தவிர, நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கூடுதலான படுக்கை அறைகள் கட்டவும், கட்டில், விரிப்புகள், மருத்துவ உபகரணப் பொருள்கள் வாங்குவதற்காக அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மேலும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இன்னும் சில தினங்களில் தமிழகம் முழுவதும் 350 மருத்துவர்கள், 744 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 1094 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.

    No comments:

    Post a Comment

    Madras university yet to get surplus grant from centre

    Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...