Thursday, October 26, 2017

வாழ்வை வளமாக்கும் வாசிப்பு


By கிருங்கை சேதுபதி  |   Published on : 26th October 2017 01:24 AM  
sethupathi
Ads by Kiosked
அன்றாட வாழ்வில் உடல்நலம் காக்க இன்றியமையாத பயிற்சியாக நடை இருப்பதுபோல் உளநலம் பேண உதவும் ஒரு பயிற்சியாக நாம் வைத்துக்கொள்ள வேண்டியது, வாசிப்பு. 
'பணிபெறுதலுக்கான அளவோடு முடிந்துவிடுகிறது, படிப்பு' என்பது மூடத்தனம். சுவாசிக்கும் காலம் வரை சுகமாய் வாழ, வாசிப்பே உயர்துணை; அதுவே உயிர்த்துணையும். 
காலையும் மாலையும் கைகள் வீசிக் காலார நடப்பது உடலுக்கு எவ்வளவு சுகமோ, அவ்வளவு சுகம், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து மனங்குளிர வாசிப்பது. 
அருளுணர்வை, அல்லது தன்னம்பிக்கை தரும் மந்திரம் போன்ற நல்ல தொடர்களைத் தரும் உயர்ந்த புத்தகங்களில் இருந்து நெஞ்சம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்குக் கொஞ்சமாய்ப் படித்தால் கூடப் போதும். 
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகிறதோ இல்லையோ, வாய் விட்டு வாசித்தால் மனத்தைப் பீடித்திருக்கும் மௌன அழுத்தங்கள் தானே விடைபெற்றுப்போகும். 
மௌனவாசிப்போ, மகத்தான சுகானுபவம். அதுபோல், மாலையில் இயலாவிடினும் இரவில்! 'உணவு முடித்தபின் நல்லுறக்கம் வாய்க்க மெல்லிய நடை தேவை' என்று சொல்கிறார்கள். அது உடலுக்கு; அதுபோல் மனதுக்கும் மெல்லிய வாசிப்பு இதந்தரும். 
பலப்பல எண்ணங்கள், ஏக்கங்கள் எல்லாம் வந்து அழுத்த, நல்லுறக்கமின்றித் தவிக்கும் கணங்களில், மெல்லிய தென்றல் போன்ற உரைநடை நூல்கள் பெரிதும் உதவிடும். தனிமைக்குத் துணையாகும் எந்தவொரு நூலும் தன்னலங் கருதா உன்னதத்தோழன். 
எத்தனை முறை எடுத்துப் படித்தாலும் முதல்முறை போலவே, ஈர்க்கும் புத்தகம், இனிய காதல்இணை; தடுமாறும் கணங்களில் தடம் மாறிவிடாமல் தாங்கி நெறிப்படுத்தும் நூல், நல்லாசான்; எந்த நிலையிலும் இன்னுயிர்க்கு, இன்னல் வாராமல் காப்பது தெய்வநூல்! 
இப்படி எல்லா நிலைகளிலும் மனிதர்கட்குக் கூட வரும் ஞானப் பெட்டகங்கள் நூல்கள்; நெறியின் புறங்கொண்டு நிறுத்தி மனிதமனங்களை மாசுபடுத்தும் தீயசக்திகளை ஒட்டவிடாமல் துரத்துகின்ற தூய தேவதைகள்! 
எழுதியவரையும், எடுத்து வாசிப்பவரையும் நேருற நிறுத்திச் சீருற ஆக்குவது வாசிப்பு. வாசிப்பு என்பது, வாழ்வை மேன்மையாக்கும் தவம். 
வரிகளாய் விரியும் வாசகங்களின் உள்ளே, வாழ்க்கை அனுபவங்கள் பதிவான அழகை ஒன்றி வாசிப்பது, ஒருவகை தியானம்; நின்று சிந்திப்பது ஆழ்ந்த தியானம்; அனுபவத்தில் செயல்படுத்தும்போது, அது யோகம். இந்நிலை தொடர்ந்து வரவர, தத்தம் நிலையில், தொலைநோக்குத் திறனாகிய தீர்க்கதரிசனப் பார்வை புலப்படும். 
நாட்பட நாட்படக் கூர்பெறும் இத்திறத்தினால், தனிநபர்க்கும், சமுதாயத்திற்கும் நன்மையே பெருகும். அத்தகைய தனிநபர்களே, சமுதாயம் போற்றும் சான்றோர்களாக என்றென்றும் வரலாற்றில் வாழ்கிறார்கள். 
வாசல் இல்லாத வீடும் வாசிப்பு இல்லாத வாழ்நாளும் பயனற்றவை என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். அத்தகு அனுபவம் வாய்க்கப் பெறாதவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பல்வேறு அல்லல்களுக்கு ஆட்பட்டுத் தவிப்பதைக் காண்கிறோம். 
நலம் வேண்டி மருத்துவர்களை நாடுகிறவர்களின் உடற்கூறுகள்தாம் பெரும்பாலும் பரிசோதனைகளுக்கு ஆட்படுகின்றனவேயன்றி, உள்ளம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை. பல சமயங்களில் இனம்புரியாத மன அழுத்தங்களே, உடல்நலம் கெடுக்கும் காரணிகளாகவும் ஆகிவிடுகின்றன. 
சின்னச் சின்ன உடல்சார் சிக்கல்கள்கூட, பென்னம்பெரிய மனக்கவலைகளை வளர்த்து நம்மை நோயாளிகளாக்கி விடக்கூடியவை. அவற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் கவசங்கள், புத்தகங்கள். 
பிறர் அனுபவங்களையும் தன்னனுபவமாக்கித் தரக்கூடியது வாசிப்பு. பயன்படுத்தாத கத்தி, துருப்பிடிப்பதுபோலத்தான் பயன்பாடில்லாத புத்தியும். வரம்பு மீறிப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், கருவிகள் பழுதாகிவிடுகின்றன; அவைபோல், பயன்படுத்தாதவையும். 
அந்த வரிசையில் உடல் உறுப்புகளும் அடங்கும்; அதில், உள்ளத்திற்கும் இடம் உண்டு. உள்ளும் தொழில் புரிவதால் அது 'உள்ளம்'. 'உள்ளத்தனையது உயர்வு' என்கிறது வள்ளுவம்; அதற்கு முன்னொட்டாய் 'மாந்தர்க்கு' என்று தனித்தும் உணர்த்திவிடுகிறது. 
இன்னும் நுட்பமாய் விளங்கிக் கொள்ள, நம்மை நீர்நிலையின் முன் கொண்டுபோய் நிறுத்துகிறார் வள்ளுவர். நீரின் மட்டமும், மேல் மலர்ந்த மலர்களின் உயரமும் சமம். கரை உயர்ந்த நீர்நிலையில் கால் பங்குதான் நீர். 
ஒருநாள் இரவில் பெய்த பெருமழையில் கரை தொட்டு நிறைகிறது குளம். அதனளவு உயர்ந்து சிரிக்கின்றன, அல்லியும், தாமரையும். 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று விளக்கிக் காட்டுகிறார் வள்ளுவர். 
மலர்களைக் கைகாட்டிய வள்ளுவர் மானுடத்தை நோக்கி, மௌனமாக வினாத் தொடுக்கிறார்: 'உடல் உயரம் வளர்ந்த அளவிற்கேனும் உள்ளம் உயரவேண்டாமா?' 
எத்தனை பெரிய பள்ளத்தில் அழுத்தப்பட்டுக் கிடந்தாலும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் மேவிவரும் கவிப் பெருக்கையும், கலைப்பெருக்கையும் உள்வாங்கிக் கொண்டால் உயரலாம் என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை. 
இங்கே இன்னொரு உண்மையையும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தத்தம் துறைசார்ந்த அறிவிலும் சிந்தனையிலும் மட்டுமே, ஒருவர் உயர்ந்திருந்தால் போதாது. பல்துறைசார் அறிவும் பக்கபலமாக, தத்தம் துறைசார் அறிவும் மிக்கு உயர்வதே வளர்ச்சி. 
இன்றைக்கு அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்கள் அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. வாசிப்பில் இருந்து, படிப்பிற்கும், படிப்பில் இருந்து பெறும் படிப்பினை கற்றலுக்கும் உள்ளத்தை உயர்த்திக் கொண்டு வளர்வது ஒவ்வொரு மனிதர்க்கும் உரிய கடமை! 
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பார் என் தந்தையின் தோழர் ஒருவர். அவர் பண்டிதர் அல்லர்; ஆனால், எந்தப் பண்டிதரோடும் தர்க்கம் பண்ணக்கூடிய அளவிற்குக் கம்பனைக் கற்றவர்; வள்ளுவரை உள்வாங்கியவர்; காளமேகம்போல் அவ்வப்போது கவிபாடவும் வல்லவர்; கிடைத்தவற்றைப்படித்துப் பெற்றவற்றில் இருந்து தன்னறிவைத் தமிழறிவாக வளர்த்துக் கொண்டவர். 
அவ்வாறு தான் கண்டதையெல்லாம் கற்றுக் கவிபாடினார் கண்ணதாசன். 'கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள் கதையைச் சொல்லுகிறேன்' என்று பாடிக் கதையும் எழுதிநிலைநின்றார் ஜெயகாந்தன். 
இவர்கள் எல்லாம் பள்ளிக் கல்விகூட முழுமையாக முடிக்காதவர்கள். ஆனால் இவர்களது எழுத்துக்கள் இல்லாமல் பள்ளி தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரையிலான எந்தப் பாடப்புத்தகங்களும் உருவாவதில்லை.
'கண்டது கற்றுப் பண்டிதன் ஆகலாம்' என்று படித்து அவ்வாறே பழகுகிற நாம், கற்கிறபோது இன்னும் வளரத்தொடங்குகிறோம்.
படிப்பது வேறு; கற்பது வேறு. உதட்டளவில் நிகழும் வாசிப்பு மனதில் படியும்படி தொடர்வது படிப்பு; மனதில் படியும்படியாகப் படிக்கும் பழக்கம் வழக்கமாகி, அதன்வழி, வாழ்க்கையின் அங்கமாக வளர்வது கற்றல்; அத்தகையதே கல்வி.
இப்போது 'கண்டது கற்கப் பண்டிதனாகலாம்' என்கிற பழமொழி புதுமொழியாகத் தெரிகிறது. 'கண்ணில் கண்டது (எல்லாம் எடுத்துக்) கற்கிற ஒருவன் பண்டிதன் ஆகலாம்' என்பது பழமொழி தரும் கருத்து.
'கண்டு அது கற்கப் பண்டிதன் ஆகலாம்' என்கிறபோது அது புதுமொழி. அதாவது, கண்ணில் காணக் கிடைக்கிற அனைத்தையும் கண்டு புத்தக எல்லைகள் கடந்த எந்த உண்மையையும் எந்த முறையிலும் கண்டு - அதில் தனக்கு எது தேவை எனத் தேடிக் கண்டு, அது கற்றால் பண்டிதன்; பண்டிதன் என்றால், வெறும்பண்டிதத்தனத்தை மட்டும் அது குறிக்காது; தத்தம் துறையில் தகுதிசால் அறிஞர் என்பதையும் பெற்றுத்தரும் ஒரு சொல். 'கற்றிலன் ஆயினும் கேட்க' என்றும் கட்டளையிடுகிறார் வள்ளுவர். 
'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு'
என்றும் சாடுகிறார். 
உலக அனுபவங்களை யெல்லாம் உள்வாங்கி, உலகம் உய்ய உயர்வழி காட்டிய வள்ளுவரின் வாசிப்புப் பயிற்சி, கற்றல் தவமாகிக் கற்பிக்கும் ஆசிரியர்கட்கெல்லாம் மேலான பேராசானாக உயர்த்தியிருக்கிறது. 
அதுமட்டுமல்ல, மருத்துவர், பொறியாளர், பொருளியல் வல்லுநர், அரசியலாளர், அறிவியலாளர், ஆன்மிக, தத்துவப் பேராளர், இவர்களோடு எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத எல்லார்க்கும் 'எழுத்தறிவிக்கும் இறைவனாக' நிலை நிறுத்தியிருக்கிறதே! 
அந்தவழி வந்து தத்தம் சொந்தத்துறைகளில் கால்பதித்துச் சரித்திரம் படைத்தவர்கள் எல்லாரும் வள்ளுவரின் சந்ததியர்தாமே!

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...