Thursday, October 26, 2017

தீருமா கந்துவட்டிக் கொடுமை?


By ஆர். வேல்முருகன்  |   Published on : 26th October 2017 01:23 AM  |
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள், பெற்றோர் என நான்கு பேர் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்க்கும்போது கல்மனம் கொண்டவர்கள்கூட கண்ணீர் வடித்திருப்பார்கள்.
கந்து வட்டிக் கொடுமை இன்றும் ஊருக்கு ஊர் நடந்து கொண்டுதான் உள்ளது. பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். 
காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து கந்து வட்டி கேட்டுக் கொடுமைப்படுத்தியவர்களைக் கைது செய்தனர். அத்துடன் சரி.
இந்த விஷயத்தில் அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கந்து வட்டிக்கு விடுபவர்கள் யாரென்று காவல்துறைக்கு நன்றாகத் தெரியும். இந்த விஷயத்தில் கந்து வட்டிக்கு விடுபவர்கள், காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் முக்கோணக் கூட்டணிதான் வெல்கிறது.
இந்தப் பிரச்னையில் அப்பாவிகள் மட்டும் கந்து வட்டிக் கொடுமையை அனுபவிக்கவில்லை. மிகப் பெரிய தொழிலதிபர்கள், நடிகர்கள் கூட கந்துவட்டிக் காரர்களிடம் சிக்கிக் கொண்டு படாதபாடு படுகின்றனர். 
தொழிலை விரிவுபடுத்தவும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணத்துக்காகவும்தான் இவ்வாறு வெளியிடங்களில் பணம் புரட்ட வேண்டியுள்ளது.
வங்கிகளின் பாராமுகத்தாலும் தேவைப்படும் பணத்தை உடனே புரட்ட முடியாததாலும்தான் அனைவரும் தனியார் நிதி நிறுவனங்களையும் கந்து வட்டிக்காரர்களையும் நாட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. 
நமது வங்கியாளர்களோ ஏமாற்றுப் பேர்வழிகளுக்குத்தான் தேவைப்படும் பணத்தைக் கொடுக்கிறார்களே தவிர உண்மையிலுமே தேவைப்படுவோர்களுக்குத் தொகையைக் கொடுப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகளையும் தேவையில்லாத நடைமுறைகளையும் சொல்லி உதாசீனப்படுத்துகிறார்கள்.
சிறுதொழில்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட இடங்களில் கந்துவட்டிக் கொடுமை மிக அதிக அளவில் உள்ளது. 
இங்கெல்லாம் ரூ.1 லட்சத்துக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1,500 வரை கந்துவட்டி வசூலிக்கப்படுகிறது. பணத்தை வாங்கிவிட்டுத் தரத் தாமதப்படுத்தினால் வீட்டுக்கு வந்து தரக்குறைவாகப் பேசுகிறார்கள். 
இதனால் அக்கம்பக்கத்தினர் வேடிக்கைப் பார்க்கும் சூழ்நிலை உருவாகிறது. இதற்குப் பயந்துதான் பலர் தங்கள் வாழ்க்கை மாய்த்துக் கொள்கின்றனர்.
எல்லாம் முடிந்தபிறகு போலீஸார் தங்களிடம் எந்தப் புகாரும் இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிடுகின்றனர். பிறர் மீது மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் போலீஸார் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கந்து வட்டிக் கொடுமையும் அதனால் பலர் பாதிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் புகார் வந்தவுடன் சிறிது நாள்களுக்குப் போலீஸார் நடவடிக்கை எடுப்பது போலக் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் இருக்காது.
கந்துவட்டிக் கொடுமை என்று புகார் வந்தவுடன் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் கொடுப்பார்கள். இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாங்கிய பணத்துக்குக் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாகவும் பல பொய்ப் புகார்கள் வருகின்றன. 
ஆனால் காவல்துறையினர் இதையும் பதிவு செய்து மொத்தம் இவ்வளவு புகார்கள் வந்தன. அதில் இத்தனை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன என்ற கணக்குக்காகப் பதிவு செய்து தாங்கள் சரியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர். அதற்கு மட்டுமே இந்தக் கணக்குகள் உதவும். வேறு எதற்கும் பயனில்லை.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் யாரைக் குற்றம் சொல்வது? 
கொடுத்த பணத்தை வட்டியுடன் வாங்கிக்கொண்டு மீண்டும் வட்டி தர மிரட்டியவரையா? புகார் கொடுத்தும் அதை விசாரிக்காமல் விட்ட காவல்துறையினரையா? புகாரைப் பெற்றுக் கொண்ட பின் நடவடிக்கை எடுக்க முடியாத மாவட்ட ஆட்சியரையா? தங்கள் குழந்தைச் செல்வங்களைத் தீக்குளிக்க வைத்துக்கொன்ற பெற்றோரையா? 
பெற்றோர் செய்த தவறுக்கு குழந்தைகளுக்கு எதற்காகத் தண்டனை? தீயில் உடல் பற்றி எரியும்போது எதற்காகத் தனக்கு இந்தக் கொடுமை நடக்கிறது. இதற்கு யார் காரணம் என்று அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்குமா? அப்போது அக் குழந்தைகளின் மனதில் என்ன தோன்றியிருக்கும்?
இதற்கெல்லாம் அரசு எப்போது முடிவு கட்டப்போகிறது? வங்கிகளின் விதிகளில் மட்டுமல்லாமல் காவல்துறையினரிடமும் மனமாற்றம் வேண்டும். அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் பல உயிர்கள் பலியாவதைத் தடுக்க முடியாது.
வங்கிகளும் தேவையானவர்களுக்குத் தகுந்த பண உதவிகளைச் செய்ய வேண்டும். இதற்காக தங்கள் சட்ட திட்டங்களில் இருந்து சிறிது மாறினாலும் தவறில்லை. அதன் மூலம் சமுதாயத்துக்கு நன்மை செய்ய வேண்டும். 
பணம் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. பணமில்லாத ஏழைகள் அனைவரும் மோசமானவர்களும் அல்ல.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் செய்யும் பலர் வங்கிகளின் விதிமுறைகளுக்கு பயந்து வங்கிகளில் கடன் வாங்காமல் கந்துவட்டிக் காரர்களை நாடுகின்றனர். வங்கிகள் பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஏமாற்றுகின்றனர். 
தங்களுக்குக் கடன் தொகை குறைவாகக் கொடுத்தாலும் அதைக் கட்டி முடிக்கும் வரை தூங்காமல் பாடுபட வேண்டும் என்ற எண்ணமுள்ள ஏழைகளுக்கு வங்கிகள் தாராளமாகக் கடன் கொடுக்க முன்வந்தால் மட்டுமே இந்நாட்டில் ஏழைகள் உயிரைக் குடிக்கும் கந்து வட்டிப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...