Tuesday, October 10, 2017

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 11 பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு


By DIN  |   Published on : 10th October 2017 04:56 AM  
gothra

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 20 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையம் அருகே கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியன்று சபர்மதி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு மர்ம கும்பல் ஒன்று தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது. இதில் அந்த பெட்டியில் இருந்த 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கரசேவர்கள் ஆவர். இதையடுத்து, குஜராத் முழுவதும் மூண்ட மதக் கலவரத்தில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையத்தை அப்போதைய குஜராத் அரசு அமைத்தது. இந்த அமைப்பு நடத்திய விசாரணையில், சபர்மதி விரைவு ரயிலின் எஸ்-6 பெட்டியில் ஏற்பட்ட தீக்கு, விபத்து காரணமில்லை; யாரோ அதற்கு தீ வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. 63 பேரை விடுதலை செய்தும் எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்களில், கோத்ரா ரயில் சம்பவத்துக்கு முக்கிய காரணகர்த்தாவாக சந்தேகிக்கப்படும் மௌலானா உமர்ஜித், முகம்மது அன்சாரி, நானுமியா சௌதுரி ஆகியோரும் அடங்குவர்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எஸ்ஐடி அமைப்பும், தண்டனை விதிக்கப்பட்ட 31 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் எஸ். தவே, ஜி.ஆர். உத்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பை திங்கள்கிழமை வெளியிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
11 பேருக்கு தூக்குத் தண்டனையை கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிடுகிறோம். 20 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். 63 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து (எஸ்ஐடி சார்பில்) தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், தண்டனையை எதிர்த்து (குற்றம்சாட்டப்பட்டோர்) தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்.
இந்த விவகாரத்தில், மாநில அரசு சட்டம்-ஒழுங்கை காப்பதில் தோல்வியடைந்து விட்டது. அதேபோல், ரயில்வேயும் சட்டம்-ஒழுங்கை காக்கவில்லை. ஆதலால், ரயில் எரிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கும், ரயில்வேக்கும் உத்தரவிடுகிறோம்.
ரயில் எரிப்புச் சம்பவத்தில் காயமடைந்தோருக்கு, அவர்களது காயத்தின் தன்மைகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறோம். இந்த வழக்கில், மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை முன்கூட்டியே முடிவடைந்தபோதிலும், தீர்ப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...