விபத்தில் இறந்த வீரர்களின் உடல்கள் அட்டைப் பெட்டிகளில் அனுப்ப என்ன காரணம்?
நந்தினி சுப்பிரமணி
இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டால், முதலில் தாக்கப்படுவது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை - கப்பல் படை வீரர்களும்தாம். இரவு பகல் பாராது உழைக்கும் இவர்களுக்கு எந்த நேரத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற அபாயம் இருக்கிறது. அப்படி ஒரு சூழலில்தான் கடந்த 6 ஆம் தேதி விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இறந்துபோன வீரர்களின் உடல்கள் அட்டைப் பெட்டிகளில் (Card board boxes) வைத்து எடுத்துவரப்பட்டது நாடு முழுக்க பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசம், சுனா என்ற பகுதியில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 'மீ -17 வி 5 ஹெலிகாப்டர்' விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானப்படை வீரர்கள் ஐந்து பேரும், ராணுவ வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இந்தியா - சீனா எல்லையிலிருந்து 12 கி.மீ தொலைவில் நடந்துள்ளது. அதாவது தவாங்க் பகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலியான வீரர்களின் உடல்கள் பாராசூட் மற்றும் அட்டைப் பெட்டிகளில் சுற்றிவைக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டன.
விபத்தின்போது வீரர்களின் உடல்கள் சிதைந்துபோயிருந்ததாலும், உடல்களை விரைந்து எடுத்து வரவேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலும் அந்தச் சூழலில் கிடைத்தப் பொருள்களைக் கொண்டு உடல்களை மூடி எடுத்துவந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ். பனாக் (Lt Gen H S Panag) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ' நாட்டுக்காகப் போராடச் சென்ற வீரர்கள், இந்த நிலையில்தான் வீடு திரும்பினார்கள்' என்று புகைப்படத்துடன் தனது வருத்தத்தைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ந்துபோனவர்கள், 'நாட்டுக்காகப் போராடும் மக்களுக்கு இதுதான் இந்திய ராணுவம் கொடுக்கும் மரியாதையா?' என்று கோபக் கேள்விகளைத் தொடுத்தனர். அடுத்தடுத்து இதுகுறித்த சர்ச்சைத் தகவல்களும் இணையங்களில் பரிமாறப்பட்டன.
Seven young men stepped out into the sunshine yesterday, to serve their motherland. India.
This is how they came home. pic.twitter.com/OEKKcyWj0p
— Lt Gen H S Panag(R) (@rwac48) 8 October 2017
ஆரம்பத்தில், வீரர்களின் உடலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாதுகாப்பைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பிவிட... அந்தப் புகைப்படம் வைரலானது. வீரர்களின் உடலுக்கு இதுபோன்றதொரு நிலையா... என மக்கள் கொதிக்கத் தொடங்கிவிட்டனர்.
"எல்லையில் இருக்கும் வீரர்களிடம், இந்தப் பொருள்கள் தவிர்த்து வேறு எதுவும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் இறந்துபோனவர்களின் உடல்களை அட்டைப் பெட்டிகளில் வைத்துக் கட்டியிருக்கிறார்கள்" என அதிகாரிகள் விவரிக்கின்றனர்.
இறந்தவர்களின் உடல்களை முதலில் மூட வேண்டிய கட்டாயம் இருந்ததால், அங்கு எளிதில் கிடைத்தப் பொருள்களைக் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், மக்கள் தொடர்பு துறை கூடுதல் பொது இயக்குநர் (ADG PI - Indian Army) இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார். வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை மற்றும் இறுதிச் சடங்குகள் குறித்தப் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேலும், "இந்திய மலைப் பகுதிகளில் இருக்கும் வீரர்களுக்கு அவரச காலத்தில், இதுபோன்று நடப்பது இயல்புதான். வீரர்கள் வசிப்பது பெரும்பாலும் தொலைதூரப் பகுதியாக இருப்பதுதான் இதற்குக் காரணம். மேலும், உடல்கள் சேதமடைந்த நிலையில் இருந்தன. குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் உடல்களை அந்த நிலையில் காண வேண்டாம் என்பதே இதன் முக்கியக் காரணம்" என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சில நாள்கள் முன்புகூடப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உலக தரத்துக்கு எங்களிடம் ஆயுதங்கள் உள்ளன" என பாகிஸ்தானுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். போர்க் காலங்களில், மற்ற நாடுகளை எதிர்க்கப் பலம் இருக்கும் இந்த நாட்டில்தான் வீரர்களின் உடல்களைப் பாதுகாப்பாகக் கொண்டுவர ஏற்பாடு செய்வதற்குப் போதிய வசதியும் சூழ்நிலையும் இல்லை என்பதுபோல இந்தச் செயல் நிகழ்ந்துள்ளது!
No comments:
Post a Comment