Thursday, October 19, 2017

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் முகப்பு தோற்றம்.   -  படம்: என்.ராஜேஷ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 20-ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25-ம் தேதி நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

அக்.20-ல் தொடக்கம்

இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை மறுநாள் (20-ம் தேதி) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன.
காலை 6 மணிக்கு மேல் ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து, யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

சூரசம்ஹாரம்

6-ம் நாள் விழாவான அக்டோபர் 25-ம் தேதி, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் முன்புள்ள கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

திருக்கல்யாணம்

26-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு ஆகியவை நடைபெறும்.
மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம், இரவில் திருக்கல்யாணம் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் திருச்செந்தூரில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY