Wednesday, October 4, 2017

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நிறுத்தப்படும் கார்களை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு

2017-10-04@ 00:44:07




தாம்பரம்: குரோம்பேட்டை பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. தி.நகரில் உள்ள பெரும்பாலான பிரபல துணிக்கடை, நகைக்கடை உள்ளிட்டவை தற்போது குரோம்பேட்டைக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக, விசேஷ நாட்கள், பண்டிகை கால நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க, சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி சாலையில் சினிமா தியேட்டரும் உள்ளதால் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நெரிசல் மிகுந்து காணப்படும். இப்படி தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் குரோம்பேட்டை பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான கடைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால், இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ஜிஎஸ்டி சாலையின் இரு புறங்களிலும் நிறுத்துகின்றனர்.

இதனால், குரோம்பேட்டை பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலை ஓரமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவற்றின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருக்கும் உடமைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது கணவருடன் குரோம்பேட்டை சென்றார். அங்கு, காவல் நிலையம் அருகில் உள்ள சர்ச் எதிரில் தங்களது காரை நிறுத்திவிட்டு பாணி பூரி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், இவர்களின் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பையை திருடியுள்ளனர். இதனை புவனேஸ்வரி பார்த்து சத்தம் போட்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடி உள்ளனர். இவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட ஆசாமி கர்ணன் (33) என்பதும், தப்பியவர்கள் திருச்சி மாவட்டம், சமயபுரம், ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் சண்முகம் என்பதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல, செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர மாணிக்கம் (48) உட்பட பலரது கார்களில் கொள்ளை நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சாலை ஓரம் நிறுத்திய கார்களின் கண்ணாடிகளை உடைத்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் இருப்பதாகவும், குற்றவாளிகளை பிடித்து தொடர் திருட்டு, வழிப்பறியை தடுக்க முன்வருவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்டுகொள்ளாத போலீசார்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பிரபல ஓட்டல்கள், கடைகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு முறையாக பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதை போக்குவரத்து போலீசாரோ, மற்ற காவலர்களோ கண்டுகொள்வதில்லை. இப்படி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் முக்கிய சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டல்கள், கடைகள், நிறுவனங்கள் போலீசாரை உரிய முறையில் கவனிப்பதால் அவர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024