Wednesday, October 4, 2017

கிலோ 110 ஆக உயர்வு கண்ணீரை வரவழைக்கும் சின்னவெங்காயம்

2017-10-03@ 00:54:43




நாகர்கோவில்: சின்ன வெங்காயம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி வருகிறது. பதுக்கல் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். சமையல் அறையில் முக்கிய இடம்பிடிப்பது சின்ன வெங்காயம். சைவம் ஆனாலும், அசைவம் ஆனாலும் சமையலில் சின்ன வெங்காயத்தின் பங்கு மிகவும் முக்கியம். இது சாம்பார் வெங்காயம் எனவும் அழைக்கப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் இல்லாத சமையலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் அதனுடன் ஒன்றிப்போயுள்ளனர். பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் ரூ.80 வரை சரிந்திருந்த ஒரு கிலோ சின்ன வெங்காயம் மீண்டும் கிலோ ₹110 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் மொத்த வியாபாரிகளால் பதுக்கி வைப்பதாகவும், அதுவே விலையேற்றத்திற்கு காரணம் என்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாட்டில் மிகவும் பெரிய சின்ன வெங்காய விற்பனை மையமான நாசிக் பகுதியில் உள்ள 25 குடோன்களில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். விலையேற்றத்தை ஏற்படுத்துவதற்காக சின்ன வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏழு முக்கிய வியாபாரிகள் வீடுகள், வணிக நிறுவனங்களில் சுமார் 120க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை நடத்தியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் சின்ன வெங்காயம் விலை கட்டுக்குள் வரவில்லை. நாகர்கோவில் மார்க்கெட்களில் மீண்டும் ₹110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் விலையை கேட்டாலே மக்களுக்கு கண்ணீர் வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024