Tuesday, October 24, 2017


விமான பயணி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தல் : 3 நாட்கள் போராடி ரூ.14 லட்சம் தங்க கட்டி பறிமுதல்



விமான பயணி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தல் : 3 நாட்கள் போராடி ரூ.14 லட்சம் தங்க கட்டி பறிமுதல்
கோவை: விமான பயணி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் கடந்த, 20ம் தேதி கோவை சர்வதேச விமான நிலையம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சத்தியசீலன், 37, என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரது உடமைகளை சோதனை நடத்தினர்.தொடர்ந்து, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது, வயிற்றில் தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் தங்க வைத்து, மூன்று நாட்கள் போராட்டத்துக்கு பின், வயிற்றில் இருந்து, 20 சிறிய அளவிலான தங்க உருண்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை சுங்கத்துறை கமிஷனர் சீனிவாசராவ் கூறியதாவது: இலங்கையை சேர்ந்த சத்தியசீலன் வயிற்றில் இருந்து, 434 கிராம் அளவிலான, 20 சிறிய தங்க உருண்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை பொருட்களை தான் வழக்கமாக இதுபோன்று வயிற்றில் வைத்து கடத்தி வந்தார்கள். தற்போது தங்க கட்டிகளையும், சிறிய உருண்டை வடிவில் வயிற்றில் வைத்து கடத்த துவங்கியுள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 14 லட்சம் ரூபாய். இருபது லட்சம் ரூபாய் மதிப்புக்கும் அதிகமான பொருட்கள் கடத்தப்பட்டால் தான், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய முடியும். இதனால், சத்தியசீலனை கைது செய்யவில்லை. அவர் கடத்தி வந்த தங்க கட்டிகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சத்தியசீலனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கோவை சர்வதேச விமானநிலையம் வழியாக, சமீபகாலமாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு தற்போது வரை, 3.69 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 கிலோ தங்கத்தை கோவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024