Tuesday, October 3, 2017

இசை நிகழ்ச்சியில் கொடூர தாக்குதல் அமெரிக்காவில் 50 பேர் பலி

பதிவு செய்த நாள்02அக்
2017
22:59




லாஸ் வேகாஸ்;அமெரிக்காவில், லாஸ் வேகாஸ் நகரில், இசை நிகழ்ச்சி நடந்த போது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் பலியாகினர்; 400 பேர் காயமடைந்தனர். மர்ம நபரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப், ஜனவரியில் அதிபராக பதவியேற்றார். லாஸ் வேகாஸ் நகரில் உள்ள, மேண்டலே பே ஓட்டல் அருகில், திறந்தவெளி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு, பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை காண, 2,000 பேர் திரண்டிருந்தனர். பிரபல பாடகர், ஜேசன் வேல்டகர் பாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், நிகழ்ச்சி நிறைவடைய இருந்தது.

இரவு, 10:00 மணிக்கு, அருகிலுள்ள ஓட்டலின், மாடியில் இருந்து மர்ம நபர் ஒருவன், இயந்திரத் துப்பாக்கியால், மைதானத்தில் இருந்த மக்கள் மீது சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். பலர், தலை, கழுத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து, சுருண்டு விழுந்து இறந்தனர்.துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும், அங்கு கூடியிருந்தவர்கள நாலாபுறமும் சிதறி ஓடினர். மர்ம நபர், சில நிமிட இடைவெளிக்கு பின், மீண்டும் சரமாரியாக சுட ஆரம்பித்தான். அதன்பின், ஓட்டலின் உள்ளே பதுங்கினான்.

போலீசார், மைதானத்துக்கு விரைந்து வந்து, பலியான, 50 பேரின் உடல்களை மீட்டனர். காயம் அடைந்த, 400 பேரை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பதுங்கியிருந்த ஓட்டலை, சிறப்பு ஆயுதப் பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். 32வது மாடியின் ஓர் அறையில் மர்ம நபர், பதுங்கி இருந்தது தெரிந்தது.
போலீசார், அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்தபோது, மர்ம நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் வைத்திருந்த, எட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவன், லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த, ஸ்டீபன் பேட்டாக், 64, என்பது தெரியவந்தது. ஸ்டீபனின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அவனது காதலியை தேடி வருகின்றனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய, மானிக் டெகர்ப் என்பவர் கூறுகையில், ''கண்ணாடி உடைவது போன்ற சத்தம், முதலில் கேட்டது.

''அதன் பின்னரே, துப்பாக்கிச்சூடு என்பதை உணர்ந்து கொண்டோம். சில நிமிடம் அமைதியாக இருந்தது. பின், மீண்டும் அவன் சுட ஆரம்பித்தான்,'' என்றார்.ஜோ பிட்ஸ் என்பவர் கூறுகையில், ''நிகழ்ச்சி முடியும் நேரம் என்பதால், மேடையை நோக்கி மக்கள் நகர்ந்தனர். அப்போது பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் கேட்டது. தொடர்ந்து சுட்டதால், இயந்திரத் துப்பாக்கியால் யாரோ சுடுவதை தெரிந்து கொண்டோம்,'' என்றார்.
கடந்த, 2016ம் ஆண்டு, ஜூனில், புளோரிடா மாகாணத்தில், இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 49 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு, அமெரிக்க வரலாற்றில், மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாக பதிவாகியுள்ளது.அமெரிக்க அதிபர், டிரம்ப், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






No comments:

Post a Comment

NewsToday 18.10.2024