மொபைல் நம்பருடன் ஆதாரை இணைப்பது அவசியமா? உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? #Aadhar
உங்கள் மொபைல் சர்வீஸ் புரொவைடர் யாராக இருந்தாலும் சரி. "2018 பிப்ரவரிக்குள் உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்துவிடுங்கள். இல்லையேல், சேவையில் தடங்கள் ஏற்படலாம்" என குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் தினமும் இரண்டு முறையாவது உங்கள் மொபைலை தட்டிக்கொண்டிருக்கும். உண்மையாகவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்தே ஆக வேண்டுமா?
ட்விட்டரில் பலர், ஆதாருக்கு அத்தாரிட்டியான UIDAI நிறுவனத்தின் அதிர்காரபூர்வ கணக்கிடம் "மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா?" என்ற கேள்வியை கேட்கிறார்கள். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் FAQ ஒன்றின் ஸ்க்ரீன்ஷாட் அந்தக் கணக்கில் வெளியிடப்படுகிறது.
இதன் அர்த்தம் இதுதான். "உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, உங்கள் சிம் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டை வேறொருவர் பயன்படுத்தாமல் இருக்க இது உதவும். இதைச் செய்வதற்கு உடனடியாக உங்கள் மொபைல் ஆப்ரேட்டர் ஸ்டோருக்குச் செல்லுங்கள்"
இதில் இருக்கும் "உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி"என்பதுதான் இப்போது பிரச்னை ஆகியிருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி ஓர் ஆணையை வெளியிட்டதா?
இல்லை என்பதுதான் உண்மை.
உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. அதில் ஒருவர் பெயரில் இருக்கும் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்தியிருக்கிறார். இதைத் தவிர்க்கும்பொருட்டு, எதாவது பாதுகாப்பு வழிகள் இருக்கிறதா என உச்சநீதிமன்றம் அரசைக் கேட்கிறது.
இதற்குப் பதில் அளித்த அரசு, "ஆதார் எண் மூலம் இதைச் செய்துவிடலாம். ஒவ்வொரு மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியிருந்தால், வாடிக்கையாளரின் கைரேகை தேவைப்படும். எனவே, போலி ஆவணங்கள் மூலம் இன்னொருவர் பெயரில் சிம் கார்டை வாங்கவே முடியாது. ஏற்கெனவே இருக்கும் மொபைல் எண்களையும் இணைக்கச் சொன்னால், இப்போது சந்தையில் இருக்கும் போலி சிம்களும் முடக்கப்படும் வாய்ப்புண்டு" என சொன்னது.
DOT வெளியிட்ட முழு அறிக்கையைப் படிக்க
இதைக் கேட்ட உச்சநீதிமன்றம் இதுபோன்ற பாதுகாப்பு வழிகள் எதாவது ஒன்றின் மூலம் ஓராண்டுக்குள் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களையும் உறுதிசெய்யச் சொன்னது. அதைத்தான் "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி" எனச் சொல்லிக்கொண்டு ஆதாரை மொபைலுக்கு கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் பலமுறை "ஆதார் கட்டாயம் அல்ல" என்றும் சொல்லியிருக்கிறது. மேலே சொன்ன வழக்கிலும், ஆதார் மூலம்தான் இதைச் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை.
இதை உறுதிச்செய்துகொள்ள சில டெலிகாம் நிறுவனங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டோம். அவர்களும் சரியான பதிலைச் சொல்லவில்லை.
சமூக வலைதளங்களில் தேடியதில் "அரசு எங்களைக் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆதார் எண்ணை மொபைல் என்ணுடன் இணைப்பது அவசியம்" என்று மட்டும் சொல்கிறார்கள். UIDAI கணக்கும் இதுதொடர்பான ட்வீட்களுக்குப் பதில் அளிப்பதில்லை.
ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக TRAI வெளியிட்ட சுற்றறிக்கை இங்கே
ஆதார் எண்ணை அரசு தன் சேவைகளுடன் இணைப்பது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகளை திரித்து, மக்களிடம் பொய்யான தகவலைப் பரப்பில் ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்வது சரியா? ஆரம்பம் முதலே ஆதார் விஷயத்தில் அரசு நடந்துகொள்வதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. இப்படி செயல்பட்டால் மக்கள் எந்த நம்பிக்கையில் தங்களது தனிப்பட்ட தகவல்களை எந்த பயமுமின்றி அரசுக்குத் தருவார்கள்?
ஆதாரை கட்டாயமாக்குவதில் அரசு காட்டும் தீவிர நடவடிக்கைகள் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.
Dailyhunt
No comments:
Post a Comment