Friday, October 20, 2017

மாவட்ட செய்திகள்

நிலவேம்பு குடிநீர் குடித்தால் மலட்டு தன்மை ஏற்படாது ராதாகிருஷ்ணன் பேட்டி


நிலவேம்பு குடிநீர் குடித்தால் மலட்டு தன்மை ஏற்படாது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
அக்டோபர் 20, 2017, 04:15 AM

சேலம்,

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் வந்தார். மாலையில் அவர் சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரே உள்ள சொர்ணாம்பிகை தெரு, மேட்டு மாரியம்மன் கோவில் தெருக்களில் உள்ள வீடுகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, அதில் ஏதேனும் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். காலி இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து ராதாகிருஷ்ணன் திருமணிமுத்தாறு ஓடையை பார்வையிட்டார். அப்போது அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடந்தன. இதை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் இங்கே குப்பைகள் கொட்டாதவாறும், கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மலட்டு தன்மை ஏற்படாது

இதைத்தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் படி டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவேம்பை பொறுத்தவரை சித்த மருத்துவ பேராசிரியர்களின் மேற்பார்வையில் தான் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பின்னர் வழங்கி வருகிறோம். ஆராய்ச்சி நடத்தப்படவில்லை என்று கூறுவது தவறான கருத்து ஆகும். நிலவேம்பு குடிநீர் குடித்தால் மலட்டு தன்மை ஏற்படாது.

விளக்கம் அளிக்கப்படும்

சீனா, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு மருந்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் நிலவேம்பு குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மேலும் இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிலவேம்பு சர்ச்சை குறித்து கருத்து கூறும் பிரபலங்களுக்கு சித்த மருத்துவ பேராசிரியர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட சில பகுதிகளிலும், மாநகராட்சியில் 2, 3, 6, 22, 50 உள்ளிட்ட சில வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். தனியார் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு அதிகம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...