சென்னை:அரசியல் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு சூடு வைக்கும் வகையில், ''சினிமா செல்வாக்கால், அரசியலில் ஜெயிக்க முடியாது; அதற்கு மேல் ஒன்று உண்டு. அது, என்ன என மக்களுக்குத்தான் தெரியும்,'' என, சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில், ரஜினி பேசினார். 'முரசொலி' பவள விழாவில், 'தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' என, சீண்டிய கமலுக்கு பதிலடியாக அமைந்த ரஜினியின் பேச்சு, விழாவை விவாத மேடையாக்கியது.
சென்னை, அடையாறில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு, 2.8 கோடி ரூபாயில், மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது பிறந்த நாளான நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மணி மண்டபத்தை திறந்து வைத்து பேசியதாவது:
சிவாஜி கணேசன் மணி மண்டப விழாவில் பங்கேற்றதன் மூலம், நாம் அனைவரும் பெருமை அடைந்துள்ளோம். அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்றவர்களால், பாராட்டப் பட்டவர் சிவாஜி.
பல உதவிகள்
வரலாற்று தலைவர்கள், கடவுள்களை நாம் நேரில் பார்த்தது இல்லை. அவர்களை, நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி. செவாலியே உள்ளிட்ட பல விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்.
திரையுலகில், மூன்றாவது தலைமுறையாக, அவரது குடும்பத்தினர் சிறப்பு சேர்த்து வருகின்றனர். தமிழக அரசு, திரைத் துறைக்கு, பல உதவிகளை செய்து வருகிறது. 1993 முதல், சிவாஜி கணேசன் பெயரில் விருதையும் வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ரஜினி பேசியதாவது:
மணிமண்டபத்தை திறந்து வைத்த பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி; அது, பல , தடவை நிரூபணமாகி உள்ளது. காலம் காலமாக நிலைத்து நிற்கும் இந்த சிறப்பை, பன்னீர்செல்வம் பெற்றது பாக்கியம். நடிப்புலக சக்கரவர்த்தியாக விளங்கிய சிவாஜி கணேசன் நடை, உடை, பாவனை என, அனைத்திலும் புரட்சி செய்தார்.உலக அளவில், இவரைப் போல் யாரும் நடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றவர். வெறும் நடிப்பு மட்டுமே, இவருடைய சிறப்பு இல்லை. வரலாற்று நாயகர்கள், புராணத் தலைவர்களை மக்களின் கண் முன் நிறுத்தியவர்.
அதனாலேயே, இவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போது, நெற்றியில் திருநீறு பூசி நடித்து வெற்றி கண்டவர்.
பெருமையானது
இறந்த பின், சிலர் மண்ணாவர்; சிலர் சாம்பல் ஆவர். ஆனால், சிலையான சிவாஜியுடன் பழகி இருப்பது, நமக்கு பெருமையான விஷயம். அரசியல், சினிமா இரண்டும் இணைந்த விழா இது. நடிப்பு மட்டுமின்றி,அரசியல் பாடத்தையும், சிவாஜி சொல்லி கொடுத்து உள்ளார். சிவாஜி தனி கட்சி துவங்கி, தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோற்றார். அது, அவருக்கு கிடைத்த அவமானம் அல்ல; அத்தொகுதி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.
அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், செல்வாக்கு, பணம் மட்டும் போதாது. அதற்கு மேல் ஒன்று உண்டு. அது என்னவென மக்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது; அந்த ரகசியம் கமலுக்கு தெரிந்து இருக்கலாம் என, நினைக்கிறேன்.அதை, இப்போது கேட்டால் சொல்ல மாட்டார்; 'என்னுடன் வா சொல்கிறேன்' என்கிறார். ஒரு வேளை இரண்டு மாதத்திற்கு முன் கேட்டு இருந்தால், சொல்லியிருப்பார் என, நினைக்கிறேன். சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்ந்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு நன்றி.இவ்வாறு ரஜினி பேசினார்.
தன்மானம்
'சினிமா செல்வாக்கால் ஜெயிக்க முடியாது' என்ற ரஜினியின் பேச்சு,அரசியலில் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு, சூடு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆக., 10ல், சென்னையில் நடந்த, 'முரசொலி'
பவள விழாவில், ரஜினி மேடையில் அமராமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். கமல், தன் பேச்சில், 'எனக்கு தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' எனபேசி, ரஜினியை மறைமுகமாக கிண்டலடித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த விழாவில் ரஜினி பேசியுள்ளார். சிவாஜி மணி மண்டப திறப்பு விழா, அரசியல் விவாத மேடையாகி விட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
நடிகர் கமல் பேசியதாவது:
மாநில, தேசிய, ஆசிய எல்லைகளை கடந்த உலக நடிகர் சிவாஜி. நான் நடிகனாகவில்லை என்றால், ஒரு ரசிகனாக வெளியே இருந்து, இந்நிகழ்ச்சியை பார்த்து இருப்பேன். நடிப்பை கற்றுக் கொடுத்து, என்னை போன்ற பலரின் வாழ்க்கையை மேம்படுத்திய, கலைஞனுக்கு நன்றி செலுத்தும் விழா இது.
எத்தனை அரசுகள் வந்தாலும், சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். இதை, வற்புறுத்தியோ, கெஞ்சியோ, மிரட்டியோ கேட்க வேண்டியதில்லை. மணி மண்டபம் அமைத்து,விழா எடுத்த அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் பிரபு பேசுகையில்,''சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழாவால், ஜெயலலிதாவின் கனவு நனவாகி உள்ளது. சிவாஜி சிலையை அமைத்த, கருணாநிதியின் பெயரும், கல்வெட்டில் இடம் பெற வேண்டும்,'' என்றார்.விழாவில், அமைச்சர்கள் ஜெயகுமார், ராஜு, பாண்டியராஜன், பெஞ்சமின், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., நட்ராஜ், நடிகர்கள் நாசர், விஷால், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
எதிரும், புதிரும் கைகோர்ப்பு
* எதிரும், புதிருமாக கடுமையாக விமர்சித்து கொண்ட அமைச்சர் ஜெயகுமாரும், நடிகர் கமலும், மேடையில், கை குலுக்கி, சிரித்து பேசினர். கமலுக்கு, ஜெயகுமார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்
* மணிமண்டபம் திறப்பு விழா முடிந்து, வி.ஐ.பி.,க்கள் சென்றதும்,
ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், சிவாஜி சிலை முன் நின்று, புகைப்படம் எடுத்தனர். சில ரசிகர்கள், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்
* மெரினா கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட சிவாஜி சிலை, மணிமண்டபத்தின் வெளியே நிறுவப்படாமல், உள்ளே நிறுவப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
* மணிமண்டபத்தின் உள்ளே, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில்
பிரபலமான நடிகர்களுடன், சிவாஜி கணேசன் உள்ள புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது
* மணிமண்டப வாசல், வடக்கு திசை பார்த்து, வாஸ்து அடிப்படையில்அமைக்கப்பட்டுள்ளது.
சிலையும், வடக்கு நோக்கியே அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கடற்கரை சாலையில், சிவாஜி சிலை, வடக்கு நோக்கியே நிறுவப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment