Monday, October 2, 2017

முதல்-அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்


சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அக்டோபர் 02, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உரிய நேரத்தில் விரைந்து கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவற்றை தேவையான அளவு வழங்கிட வேண்டும்.

பொதுப்பணித்துறையின் மூலம் புதியதாக தொடங்கப்பட உள்ள கட்டிடப்பணிகள், ஊரக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பிரதான சாலை மற்றும் கிராம சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சலை உண்டாக்கக்கூடிய ஏடிஎஸ் கொசுக்கள் திறந்து வைக்கப்பட்ட நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களின் பங்களிப்புடன் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நிலவேம்பு குடிநீரை பள்ளி, கல்லூரிகளிலும், பஸ் நிலையம், ரெயில் நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் குறித்த கால அளவில் தூய்மை செய்து குளோரினேசன் செய்ய வேண்டும். சுகாதார வளாகங்களை பராமரிக்கவும் மற்றும் கழிவுநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யவும் வேண்டும். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சென்று சேர்வதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செந்தமிழ்ச்செல்வன், துணை இயக்குனர்(சுகாதாரம்) பூங்கொடி உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட அளவிலான முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வீட்டில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024