Monday, October 2, 2017

ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட ஓட்டை உடைசல் பஸ்களால் பயணிகள் பெரும் தவிப்பு



ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் ஓட்டை உடைசல்களாக இருந்ததால் பயணத்தின் போது பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

அக்டோபர் 02, 2017, 04:15 AM
சென்னை,

பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையையும் போக்குவரத்து கழகம் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்த பஸ்களில் பயணிகள் இரவு முழுவதும் அதாவது தொடர்ந்து 13 மணிநேரம் பயணம் செய்ய முடியுமா? என்பது பற்றி எவரும் பார்ப்பதாக தெரியவில்லை. வருமானத்தை அதிகரிப்பதில் தான் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர பஸ்களின் நிலை குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இதனால் 12 மணிநேரம், 14 மணிநேரம் பயணம் செய்யும் பயணிகளின் அவலநிலை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 29-ந் தேதி மாலை 4½ மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டுக்கு புறப்பட்டு சென்ற விரைவு பஸ்சில் இருக்கை சரி இல்லை என்று கண்டக்டரிடம் பயணிகள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறப்பு பஸ்களை இயக்கும் விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்கப்படுவதாக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்று இயக்கப்படாது என்று உறுதி அளித்தார். ஆனால் அதனையும் மீறி ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்குவது தொடர் கதையாகி வருகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் முறையாக பரா மரிக்காமல் வெகு தூரங்களுக்கு இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களை ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு என்ற காரணத்திற்காக பயணிகள் விரும்பி செல்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள் முறையாக இல்லாததால் 13 மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்யும் முதியவர்கள், பெண்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் முதுகு வலி, கால்வலி ஏற்பட்டு மருத்துவ செலவுக்கு உள்ளாகின்றனர்.

பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று மருத்துவமனையை நாடி செல்லும் அவல நிலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் தள்ளி விடுகின்றன.

பஸ் கண்டக்டரிடம் இதுபற்றி புகார் அளித்தால், இருக்கை சரி இல்லை என்றால் பஸ்சை விட்டு கீழே இறங்குங்கள் என்றும், ஆன்-லைனில் டிக்கெட் வாங்கினால் அதற்கான கட்டணத்தை அரசு விரைவு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் போய் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கின்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வருமானத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற ஓட்டை உடைசல் பஸ்களை பண்டிகை காலம் மட்டும் அல்லாது எப்போதும் இயக்க வேண்டாம். பயணிகளின் உயிரோடு விளையாடுவதை அரசு விரைவு போக்குவரத்து கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுவதை தவிர பயணிகளுக்கு வேறு வழி தெரியவில்லை.

இவ்வாறு பயணிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...