Tuesday, October 3, 2017

அமைச்சரின் மவுனம்: கிளம்புது சந்தேகம்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதாவை, அமைச்சர்கள் சந்தித்தனரா என்ற கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.



அவரது மவுனம், இந்த விவகாரத்தில், மேலும்சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி, முன்னாள் முதல்வர், ஜெ., உயிரிழந்தார். ஜெ., மருத்துவமனையில் இருந்த வரை, சசிகலாவை தவிர, வேறு யாரும்  பார்க்கவில்லை என, கூறப்படுகிறது.

ஜெ.,யை பார்த்தோம்

ஆனால், மருத்துவமனைக்கு வந்து சென்ற அமைச்சர்கள், தினமும்,
'ஜெ., நல்ல நிலையில் இருக்கிறார்; இட்லியும், சட்னியும் சாப்பிட்டார்' என, நேரில் பார்த்தது போல், அப்பல்லோ வாசலில் பேட்டி அளித்தனர்.இந்நிலையில், 'ஜெ.,யை நாங்கள் பார்க்கவில்லை.நாங்கள் சொன்னது எல்லாம் பொய்' என, சில நாட்களுக்கு முன், அமைச்சர் சீனிவாசன் கூறி, திடீர் சர்ச்சையை கிளப்பினார்.

அதற்கு எதிராக, 'அனைத்து அமைச்சர்களும், ஜெ.,யை பார்த்தோம்' என, அமைச்சர்கள், ராஜு, நிலோபர் கபில் ஆகியோர் கூறினர். அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால், ஜெயலலிதாவை பார்த்தனரா, இல்லையா என்ற கேள்வி எழுந்து உள்ளது.அதனால், சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரான, விஜயபாஸ்கர், இதற்கு விளக்கம் அளிப்பார் என, பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஏற்கனவே, இவர், ஜெ.,மறைந்த சில நாட்களில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை, அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து, செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.அதனால், தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தையும், அவரே தீர்த்து வைப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.
அமைச்சர் மவுனம்

சென்னையில், அரசு நிகழ்ச்சிக்கு பின், விஜயபாஸ்கரை சந்தித்த செய்தியாளர்கள், 'மருத்துவமனையில், ஜெ.,யை, அமைச்சர்கள் சந்தித்தனரா, இல்லையா' என, கேட்டனர்.அதற்கு பதில் கூறாமல், பெரிய கும்பிடு போட்டு போய் விட்டார், அமைச்சர். சசிகலாவின் ஆதரவாளராக கருதப்பட்ட, விஜயபாஸ்கர், இதற்கு பதில் கூறாமல் மவுனம் காப்பது, இந்த விவகாரத்தில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024