Tuesday, October 3, 2017

காய்ச்சல் பாதித்த 100 பேரில் 6 பேருக்கு டெங்கு:மதுரையில் குவியும் நோயாளிகள்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:53




மதுரை;மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படும் 24 மணி நேர காய்ச்சல் சிறப்பு வார்டிற்கு தினமும் சராசரியாக வரும் 100 பேரில் 6 பேர்களுக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு வருகிறது.கடும் காய்ச்சல் பாதித்து தினமும் 1,500 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். ரத்த பரிசோதனையில் பலருக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு சிறப்பு வார்டில் மேல்சிகிச்சை பெறுகின்றனர். 

டெங்கு காய்ச்சலுக்கு ஒத்தக்கடை திருச்செல்வி,11, செல்லுார் சஞ்சனா,4, விளாங்குடியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பரமேஸ்வரி, திருமங்கலம் ஜவஹர்நகர்தெரு நாகப்ரஜீத்,13, உட்பட 2 மாதத்தில் மட்டுமே 7க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இன்னும் ஏராளமானவர்கள் டெங்கு பாதிப்பில் பலியானாலும், கல்லீரல் பாதிப்பு உட்பட பிற நோய்களால் மட்டுமே இறக்கின்றனர் என அரசு மருத்துவமனையில் மழுப்பலான தகவல் தருகின்றனர்.

மாவட்டத்தில் செல்லுார், ஒத்தக்கடை, வாடிப்பட்டி, திருமங்கலம், விளாங்குடி உட்பட அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் மந்த நிலையில் நடப்பதால் ரோடுகள், வீடுகளை சுற்றியுள்ள பயனற்ற டயர், உரல், சிரட்டைகளில் மழை நீர் தேங்கி கொசுக்கள் மூலம் தீவிரமாக காய்ச்சல் பரவி வருகிறது.டெங்கு அதிகரிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, மதுரை அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவிற்குள் 24 மணிநேர காய்ச்சல் சிறப்பு பிரிவு செயல்படுகிறது. 

இங்கு 5 டாக்டர்கள் சுழற்சி முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். தினமும் காய்ச்சல் பாதித்து வரும் 100 பேர்களில் 6 பேர்களுக்கு டெங்கு அறிகுறி தென்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதனால், மதுரை நகரே டெங்கு பீதியில் தவித்துவருகிறது. டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, சுகாதாரப்பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024