Tuesday, October 3, 2017

ரேஷனில் வழங்கும் பருப்பு பழனிசாமிக்கு, 'பார்சல்'

ரேஷன் பருப்பு பார்சலை, முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், தபாலில் அனுப்ப, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.



தமிழகத்தில், சிறப்பு பொது வினியோக திட்டப்படி, ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, கிலோ, தலா, ௩௦ ரூபாய்க்கும், லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவற்றுக்காக, ஆண்டுக்கு, 1,400 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக, துவரம் பருப்பிற்கு பதில், கனடா பருப்பு வழங்கப்படுகிறது.

தரமற்ற பருப்பு

நுகர்பொருள் வாணிபக் கழகம், அதிக  விலைக்கு பருப்பு, பாமாயில் வாங்கியதால் ஏற்பட்ட இழப்பு மற்றும் நிதி நெருக்கடி போன்றவற்றால், சிறப்பு வினியோகதிட்டத்தை நிறுத்த, ஜனவரியில், தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த விபரத்தை, மக்களிடம் முறையாக தெரிவிக்கவில்லை. இதனால், பொருட்கள் கிடைக்காததால், மக்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, உளுத்தம் பருப்பை நிறுத்தி, மார்ச் முதல், கனடா பருப்பு, பாமாயில் மட்டும் வழங்கப்படுகின்றன. தற்போது, கனடா பருப்பிற்கு பதில், மசூர் பருப்பு வழங்கப்படுகிறது. இது, தரமற்று மோசமாக இருப்பதாக, மக்களிடம் இருந்து, தொடர்ந்து புகார்கள்வந்தும், அரசு அலட்சியமாக உள்ளது.

எந்த நடவடிக்கையும் இல்லை

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: கடைக்கு வருகிற பருப்பை தான், மக்களுக்கு தருகிறோம். அது, 'சமையலுக்கு உகந்தது அல்ல' எனக்கூறி, அவர்கள்,

எங்களுடன் பிரச்னை செய்கின்றனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால், ஒவ்வொரு மாவட்ட ரேஷன் கடைகளில் இருந்தும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு, இந்த பருப்பு பார்சலை, தபாலில் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024