Monday, October 2, 2017

"பார்த்தோம், பார்க்கவில்லை.." அதிரவைத்த அமைச்சர்களையும் விசாரிக்குமா விசாரணை கமிஷன்?

vikatan

ஜெ.பிரகாஷ்



தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒருவருடத்தைக் கடக்கவிருக்கும் நிலையில், அவரது மரணத்தில் எழும் சர்ச்சைகளும், அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங்களுமே இன்றைய சமூக வலைதளங்களுக்கும், பத்திரிகை உலகுக்கும் செய்தியாக இருக்கிறது. ஜெ-வின் மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியலே மாற்றம் கண்டது. அந்த நேரத்தில், அவருடைய மரணம் பற்றி விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால், அவர் நின்ற தொகுதி (ஆர்.கே.நகர்) காலியாக அறிவிக்கப்பட்டு... இடைத்தேர்தல் வந்ததால், அவற்றையெல்லாம் மறந்துபோயினர் நம் அரசியல்வாதிகள். அதற்குப் பின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தகவல் சொல்லப்பட, அந்தத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்தது தேர்தல் ஆணையம். இடையில் மீண்டும் அ.தி.மு.க-வில் பல நாடகங்கள் அரங்கேற... திரும்பவும் பூதாகரமாய் வெடித்திருக்கிறது ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம். இதையடுத்து, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாய் அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், '' 'ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன்' அறிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டு இரு அணிகளும் இணைந்து, சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தைத் தொடங்கப் போடுகிற மோசடித் திட்டம்'' என்று தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகர் ஆனந்தராஜும், ''இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷன், மக்களுக்கு மிகப்பெரிய கண்துடைப்பாகத்தான் இருக்கும். இதன்மூலம் யாரும் எதையும் புதிதாகத் தெரிந்துகொள்ளப் போவதில்லை. அ.தி.மு.க-வில் இருக்கும் அணிகள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே மாறிமாறித் திட்டம் தீட்டுகின்றன. ‘பன்னீர்செல்வம் கேட்டதற்காக விசாரணை கமிஷன் அமைக்கவில்லை’ எனச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து விசாரிக்க நினைத்திருந்தால் அதை முன்பே செய்திருக்க வேண்டும். அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதியைவைத்து இதை விசாரிப்பதில் என்ன நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. அப்படி விசாரணை அமைக்கப்பட்ட எந்த வழக்குகளும் முடிவுக்கு வந்ததுமில்லை'' என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், ''ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால், அதைச் சந்திக்கத் தயார்'' என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் தலைவர் பிரதாப் சி.ரெட்டி அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர், ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே, விசாரணை கமிஷன் அமைத்தால், அதைச் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாகத் தற்போது நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி தற்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வின் நீதித்துறை உறுப்பினராக உள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான விவகாரம் 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ''கர்நாடக நீதிமன்ற முடிவுகளில் சென்னை நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று தீர்ப்பளித்தவரும் ஆறுமுகசாமிதான்.

'கமிஷனின் விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும்' என்று கூறப்பட்டுள்ள நிலையில், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அ.தி.மு.க-வினர் பலரும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டனர். அந்தச் சமயத்தில், ''அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையில் அம்மாவைப் (ஜெ.வை) பார்தோம்; அம்மா இட்லி சாப்பிட்டாங்க... சட்னி சாப்பிட்டாங்க... நலமாக இருக்காங்க" என்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், இப்போது ''அம்மாவை (ஜெ-வை) மருத்துவமனையில் நாங்கள் யாரும் பார்க்கவேயில்லை. நாங்கள் சொன்னது பொய். எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று பல்டி அடிக்கிறார் அதே அமைச்சர். இதற்கு விடைகொடுக்கும் வகையில், ''நாங்கள் எல்லோருமே பார்த்தோம்'' என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸோ, ''அம்மா, என்னைப் பார்த்து கையசைத்து வாழ்த்தினார்'' என்கிறார்.

''ஜெ-வின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும் வேளையில், அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-வும் இப்படி ஆளுக்கொரு கருத்தைச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அரசாங்கம், விசாரணை கமிஷனை அமைத்தபிறகும் இவர்கள் சொல்லும் பலவித கருத்துகளால் மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக, அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக விசாரணை கமிஷன் கொடுக்கும் அறிக்கை இருக்க வேண்டும். அதில், எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சொன்ன தகவல்கள் உண்மையா என்று ஆராயப்பட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கின்றனர் அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள்.

பதில் சொல்லுமா விசாரணை கமிஷன்?

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...